திருடப்பட்ட கார்கள், அதிவேக துரத்தல்: சுவிட்சர்லாந்தில் மூவர் கைது
சுவிட்சர்லாந்தின் விட்னௌ (Widnau), சென்ட்கேலன் கன்டோன் பகுதியில் இன்று காலை தொடங்கிய திருட்டு சம்பவம், பின்னர் அதிவேக துரத்தலாக மாறி, பல விபத்துகளையும் ஏற்படுத்தியதுடன், இறுதியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலை சுமார் 6.30 மணியளவில், Widnau பகுதியில் உள்ள Unterdorfstrasse வீதியில் அமைந்திருந்த ஒரு மெக்கானிக் பணிமனையில் உடைப்பு திருட்டு நடந்ததாக அவசர சேவை மையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், குற்றவாளிகள் முன்பு கிரௌவுண்டன் கன்டோனில் திருடப்பட்ட ஒரு வேன் மூலம் அங்கு வந்திருந்ததை கண்டறிந்தனர்.
அவர்கள் Widnau பகுதியில் இருந்து இரண்டு BMW கார்கள் திருடி, பின்னர் பெர்னெக் (Berneck) பகுதியில் உள்ள ஒரு நிறுவன வாகன நிறுத்தத்தில் அவற்றின் எண் பலகைகளை மாற்றிய பின் மீண்டும் தப்பிச் சென்றனர்.
போலீசார் அவர்களை A1 நெடுஞ்சாலையில் சூரிச்ச் நோக்கிச் செல்லும் போது கண்டறிந்தனர். வில் (Wil) அருகே, திருடப்பட்ட வாகனங்களில் ஒன்றை ஓட்டியவர் போலீஸ் சோதனைச்சாவடியை உடைத்து தப்பியோடியபோது, ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தார். இதையடுத்து, வாகனத்தை நிறுத்த முயற்சியில் மற்றொரு அதிகாரி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டாலும், வாகனம் தொடர்ந்து தப்பியது.

இந்த வாகனம் மாட்சிங்கன் (Matzingen), துர்காவ் பகுதியில் சென்றடைந்தபோது, இரண்டு வாகனங்களை மோதிய பின்னர், நெடுஞ்சாலை மூடப்பட்ட நிலையில் இறுதியில் நிறுத்தப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டியவர் 16 வயதுடைய மொரோக்கோ வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, மற்றொரு திருடப்பட்ட கார் A3 நெடுஞ்சாலையில் பாசல் நோக்கிச் செல்லும் போது ஆர்காவ் கன்டோன் போலீசாரால் கண்டறியப்பட்டது. ஃப்ரிக் (Frick) வெளியேற்றப் பகுதியில், வாகன ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் நின்றது. 19 வயதுடைய பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டுநர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த மற்றொரு 19 வயது நபர் கால்நடையாக தப்ப முயன்றாலும், குறுகிய நேரத்தில் பிடிக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கையில் ஆர்காவ் கன்டோனல் காவல் துறை மட்டுமின்றி, பிராந்திய போலீஸ் பிரிவுகள் மற்றும் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அலுவலகமும் இணைந்து செயல்பட்டன. மேலும், சூரிச் கன்டோனல் காவல் துறை ஹெலிகாப்டர், சென்ட்கேலன் கன்டோனல் காவல் துறை ட்ரோன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் பயன்படுத்தப்பட்டன.
இந்த மூவருக்கும் எதிராக தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.