கொள்ளையின் போது தப்பிக்க முயற்சி 11 மீட்டர் பள்ளத்தில் வீழ்ந்து காயமடைந்த திருடன்
சூரிக் மாநிலத்தின் ருத்தி (Rüti) பகுதியில், வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு வீட்டில் திருட்டு முயன்ற கொள்ளையன், வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்டதும் தப்பிக்க முயன்று 11 மீட்டர் பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார்.
காவல்துறை தகவலின்படி, செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில்,இரண்டு நபர்கள் ரூட்டி – ராப்பர்ஸ்வில்-யோனா ரயில் பாதையோரத்தில் அமைந்திருந்த தனி இல்லத்தில் நுழைந்தனர். வீட்டாரால் அவர்களின் அசைவு கவனிக்கப்பட்டதும், இருவரும் விரைவாக தப்பிக்க முயன்றனர்.
அந்த நேரத்தில், 20 வயதுடைய அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர், அங்கு சட்டவிரோதமாக தங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் வேலியைத் தாண்டி ஓட முயன்றபோது, சுமார் 11 மீட்டர் பள்ளத்தில் உள்ள ரயில் பாதையில் விழுந்தார். கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், அவசரமாக ரெகா மீட்பு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்தக் கொள்ளையனின் உடமைகளில் காவல்துறை பல திருட்டுப் பொருட்களை கைப்பற்றியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சூரிக் மாநில காவல்துறை மற்றும் வின்டர்தூர்/உண்டர்லாந்து மாநில வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து நடத்தி வருகின்றன. மேலும், அதே இரவில் நிகழ்ந்திருக்கக்கூடிய பிற திருட்டுச் சம்பவங்களுக்கும் இவர் தொடர்புடையவரா என்பதைப் பற்றியும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாவது கொள்ளையனைப் பற்றிய விசாரணையும் தொடர்கிறது.
இந்த நடவடிக்கையில் சூரிக் மாநில காவல்துறையுடன், ரீஜியோ 144 அவசர மருத்துவ சேவை மற்றும் ரெகா ஹெலிகாப்டர் மீட்பு சேவையும் ஈடுபட்டன.
சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு நபர்கள் தொடர்பான குற்றச்செயல்கள் சமூக விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. இந்த சம்பவம், குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
© Kapo Zh