தெஹ்ரானில் சுவிஸ் தூதரகம் இயங்குகிறது: ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் சமீபத்திய விமானத் தாக்குதல்களின் பின்னணியிலும், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் (Tehran) நகரில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூதரகத்தில் தற்போது 6 சுவிஸ் பிரஜைகள் மற்றும் 18 உள்ளூர் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன், மார்ச் 3 ஆம் தேதி நான்கு சுவிஸ் பணியாளர்கள் பாதுகாப்பு காரணங்களால் ஈரானை விட்டு வெளியேறியிருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுவிட்சர்லாந்து வெளிநாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்ததன்படி, உலகின் பல நாடுகளில் உள்ள சுவிஸ் தூதரகங்களில் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மை தொடர்பான திட்டங்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டுள்ளன. நிலைமைகளைப் பொறுத்து அவை தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு தேவையான மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

ஈரானில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தாக்குதல்களின் பின்னர் மத்திய கிழக்கு பகுதிகளில் வசித்து வந்த அல்லது பயணித்திருந்த ஆயிரக்கணக்கான சுவிஸ் குடிமக்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசு, அப்பகுதியில் உள்ள தமது குடிமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 5,200 சுவிஸ் குடிமக்கள் சுவிட்சர்லாந்து வெளிநாட்டு விவகார அமைச்சகத்தின் பயணப் பதிவு சேவையில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பதிவு சேவை வெளிநாடுகளில் உள்ள சுவிஸ் குடிமக்களை அவசரநிலைகளில் தொடர்பு கொள்ளவும், தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கவும் பயன்படுகிறது.