யோட்லிங் கலைக்கு ஐநா அங்கீகாரம் பெற சுவிட்சர்லாந்து முயற்சி
சுவிட்சர்லாந்து, தனது பாரம்பரிய இசைக் கலை வடிவமான “யோட்லிங்” (Yodelling) ஐ ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UNESCO) வழங்கும் “மூலமில்லா பண்பாட்டு மரபுகள் பட்டியலில்” சேர்க்க பரிந்துரைத்துள்ளது.
யோட்லிங் என்பது சுவிஸ் மலைப் பகுதிகளில் தோன்றிய தனித்துவமான குரல் மாறுபாட்டைக் கொண்ட பாடல் கலை வடிவமாகும். இது சுவிஸ் மக்களின் மலை வாழ்க்கை, கால்நடை பராமரிப்பு மற்றும் இயற்கையுடன் இணைந்த பண்பாட்டு உணர்வுகளை பிரதிபலிக்கிறது.
சுவிஸ் அரசாங்கம் இந்தக் கலையை யுனெஸ்கோவின் பண்பாட்டு மரபு பட்டியலில் சேர்க்க உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. யுனெஸ்கோ அதன் முடிவை இவ்வருட இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கீகாரம் கிடைத்தால், யோட்லிங் கலை, ஏற்கனவே அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுவிஸ் கலாச்சார மரபுகள் — பாசல் பாஸ்நக்ட் (Basel Fasnacht) திருவிழா, வேவே (Vevey) திராட்சைச் செடிகள் வளர்ப்போர் விழா, கடிகார உற்பத்தி கலை, ஆல்ப்ஸ் மேய்ச்சல் பருவம் போன்றவற்றின் வரிசையில் இணையும்.
சுவிஸ் கலாச்சார அறிஞர்கள், யோட்லிங் என்பது வெறும் பாடல் வடிவம் மட்டுமல்ல, அது சுவிஸ் அடையாளத்தின் முக்கிய அங்கமாகும் என்றும், இதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைப்பது நாட்டின் பாரம்பரிய கலைகளுக்கு பெருமை சேர்க்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
© KeystoneSDA