சுவிட்சர்லாந்தில் முன்கூட்டியே தொடங்கிய மகரந்த துகள் பரவல்
சுவிட்சர்லாந்தில் வழக்கமாக வசந்த காலத்தின் ஆரம்பத்தில் மட்டுமே காணப்பட்ட மகரந்ததூள் (pollen) பரவல், இந்த ஆண்டில் ஜனவரியிலேயே தொடங்கிவிட்டதாக Swiss Allergy Centre தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டின் பல பகுதிகளில் முதல் கட்ட மகரந்ததூள் ஏற்கனவே பரவி வருவதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
ஜனவரியிலேயே மலர்தூள் பரவல் தொடங்குவது இனி அரிதான ஒன்றல்ல என்றும், அது தற்போது “புதிய இயல்பு” ஆக மாறிவிட்டதாகவும் Swiss Allergy Centre குறிப்பிட்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் குளிர்கால வெப்பநிலை உயர்வுகள் இதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
எதிர்வரும் நாட்களில் சூரிய ஒளி அதிகரித்து, வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸை தாண்டும் நிலையில், மலர்தூள் பருவம் முழுமையாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மரங்களில் இருந்து வெளிவரும் மகரந்ததூள் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அலர்ஜி பிரச்சினையால் பாதிக்கப்படும் நபர்கள் முன்கூட்டியே தங்களின் தடுப்பு சிகிச்சைகளை தொடங்க வேண்டும் என Swiss Allergy Centre பரிந்துரை செய்துள்ளது. மூக்கு அடைப்பு, தும்மல், கண்களில் அரிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும் முன்பே சிகிச்சையை ஆரம்பிப்பது பாதிப்புகளை குறைக்க உதவும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்துவில் கடந்த சில ஆண்டுகளாக மகரந்ததூள் பருவம் முன்கூட்டியே தொடங்குவது தொடர்ச்சியாகக் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், இது பொது சுகாதாரத்திற்கான ஒரு புதிய சவாலாகவும் மாறி வருகிறது.