2026ஆம் ஆண்டில் கார் காப்பீட்டு கட்டணங்கள் மீண்டும் உயரவுள்ளன – சுவிஸ் ஓட்டுநர்களுக்கு கூடும் சுமை
சுவிஸில் அடுத்த ஆண்டு சுகாதார காப்பீட்டு கட்டணங்கள் உயரப்போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது கார் காப்பீட்டு கட்டணங்களும் 2026ஆம் ஆண்டில் உயரவுள்ளன என்று புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் 13 முக்கிய காப்பீட்டு நிறுவனங்களைச் சேர்ந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Comparis நுகர்வோர் தளம் நடத்திய ஆய்வின்படி, பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் வாகன காப்பீட்டு விலையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அதற்கான முக்கிய காரணங்களாக வாகன திருத்தச் செலவுகள் அதிகரித்திருப்பது, மாற்று உதிரி பாகங்கள் விலை உயர்ந்திருப்பது மற்றும் புயல், பனிச்சாரல், கடும் மழை போன்ற இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்கள் அதிகரித்திருப்பது குறிப்பிடப்படுகிறது.
Generali, Zurich Switzerland, Allianz, PostFinance, TCS மற்றும் Bâloise உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் 2026ஆம் ஆண்டுக்குள் காப்பீட்டு கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளன. Zurich மற்றும் TCS நிறுவனங்கள் இதை உறுதிப்படுத்தியிருந்தாலும், கட்டண உயர்வு எப்போது அல்லது எவ்வளவு என்கிற விவரங்களை வெளியிடவில்லை.

Simpego நிறுவனம், ஒவ்வொரு வாடிக்கையாளர் ஒப்பந்தம் புதுப்பிக்கும் போதும் தனிப்பட்ட அளவில் கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சுவிஸில் வாகன காப்பீட்டுத் துறையில் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மின்சார வாகனங்களுக்கான பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் செலவுகள் பாரம்பரிய வாகனங்களை விட அதிகமிருப்பது குறிப்பிடத்தக்கது.
நிபுணர்கள் கூறுவதாவது, காப்பீட்டு கட்டண உயர்வுகள் ஓட்டுநர்களின் வருடாந்திர செலவுகளை மேலும் அதிகரிக்கும் நிலையில், நுகர்வோர் தங்களுக்கு பொருத்தமான காப்பீட்டு திட்டங்களை ஒப்பிடிப் பார்த்து தேர்வு செய்வது மிக முக்கியமானதாகும்.
© KeystoneSDA