சுவிஸ் 2026 மோட்டார் வழிச்சீட்டு விற்பனை தொடங்கியது: Lidl, Aldi, Denner கடைகளில் பெரிய தள்ளுபடி
சுவிஸின் 2026 ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலை ‘விண்யெட்டா’ டிசம்பர் 1 முதல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. அதன் நிர்ணயிக்கப்பட்ட விலை 40 ஃபிராங்க் என்றாலும், பெரிய ரீட்டெயில் சங்கங்களான Lidl, Aldi, Denner (லிடில், அல்டி, டென்னர்) உள்ளிட்டவை ஏற்கனவே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 50% வரை தள்ளுபடி வழங்கும் போட்டியில் இறங்கியுள்ளன. ஆனால் இந்த தள்ளுபடிகள் குறிப்பிட்ட அளவிலான கொள்முதல் நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
Lidl இல் டிசம்பர் 1 ம் திகதி அன்று விண்யெட்டா 19.90 ஃபிராங்க் மட்டுமே. ஆனால் வாடிக்கையாளர்கள் குறைந்தது 70 ஃபிராங்க் மதிப்பில் பொருட்கள் வாங்கி, Lidl Plus அப்பை பயன்படுத்தியிருக்க வேண்டும். செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விலை 23.90 ஃபிராங்காக உயரும், (APP) அப்பில்லாத வாடிக்கையாளர்கள் 29.90 ஃபிராங்க் செலுத்த வேண்டும்.
Aldi கடையும் தள்ளுபடி போட்டியில் உள்ளது. 70 ஃபிராங்க் மதிப்பில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விண்யெட்டா 24 ஃபிராங்கில் கிடைக்கும். இந்த சலுகை டிசம்பர் 3 வரை செல்லுபடியாகும். மது, புகையிலை, ஆன்லைன் பொருட்கள், தொலைபேசி ரீசார்ஜ் கார்டுகள், குப்பை மூட்டைகள் ஆகியவற்றை வாங்கும் தொகையில் கணக்கில் எடுக்கமாட்டார்கள். முக்கியமாக, இந்த தள்ளுபடியுக்கு எந்த அப்பும் தேவையில்லை.

Denner வழக்கம்போல முந்தைய ஆண்டுகளின் முறையைத் தொடர்கிறது. 100 ஃபிராங்க் மதிப்பில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விண்யெட்டா விலையில் 10 ஃபிராங்க் தள்ளுபடி கிடைக்கும். ஆனால் இந்த சலுகை நவம்பர் 28–30 வார இறுதிக்கே மட்டுப்படுத்தப்பட்டது.
எப்போதுமே போல, 2026 விண்யெட்டா சுவிஸ் தபால் அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள், கூட்டரசு இணையதளம் போன்ற இடங்களில் 40 ஃபிராங்க் நிர்ணய விலையில் கிடைக்கிறது.
சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு துறை இந்த சலுகைகள் சட்டபூர்வமானவை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. விற்பனையாளர்கள் விண்யெட்டாவை அரசின் நிர்ணய விலையில் வாங்கி, தாங்கள் விரும்பினால் நட்டத்துக்குக் கூட விற்பனை செய்யலாம். பெரும்பாலும், வாடிக்கையாளர்களை கடைகளுக்கு ஈர்க்க இது பயன்படுத்தப்படுகிறது.