சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதிகளிலுள்ள ஜெர்மன் மருத்துவமனைகளில் இறப்பு விகிதம் உயர்வு
ஜெர்மனியின் சில மருத்துவமனைகளில் நோயாளிகளின் இறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சுவிட்சர்லாந்து எல்லையை ஒட்டியுள்ள ஜெர்மன் மருத்துவமனைகளில், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் 4.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மன்ஹெயமில் உள்ள ஐரோப்பிய பொருளாதார ஆய்வு மையம் மற்றும் மியூனிக்கில் செயல்படும் இஃபோ நிறுவனம் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் படி, இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக தகுதியான செவிலியர்கள் ஜெர்மனியை விட்டு சுவிட்சர்லாந்தின் மருத்துவமனைகளில் பணியாற்றச் செல்வதைக் குறிப்பிடுகின்றனர். சுவிட்சர்லாந்தில் வழங்கப்படும் உயர்ந்த ஊதியமும் சிறந்த பணிநிபந்தனைகளும் பல ஜெர்மன் சுகாதார ஊழியர்களை ஈர்த்து வருகின்றன.

இதன் விளைவாக, எல்லைப் பகுதிகளில் உள்ள ஜெர்மன் மருத்துவமனைகள் கடுமையான பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவுகளிலும் வயதான நோயாளிகளின் பராமரிப்பிலும் இந்த குறைபாடு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஆய்வின் ஆசிரியரான ஒலிவர் ஷ்லென்கர், “தகுதியான பணியாளர்களின் பற்றாக்குறை முதன்மையாக வயதான நோயாளிகளையும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளையும் பாதிக்கிறது. இந்த குழுக்களில்தான் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் சுகாதாரத் துறையில் பணியாளர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், நாடுகளுக்கிடையேயான ஊதிய வேறுபாடுகள் இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது எதிர்காலத்தில் சுகாதார சேவைகளின் தரத்தையும் நோயாளிகளின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
©KeytoneSDA