சுவிட்சர்லாந்தில் எல்லைத் தாண்டிய ‘ஷாப்பிங் சுற்றுலா’ அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள் அண்டை நாடுகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கும் பழக்கம் அண்மைக் காலங்களில் மேலும் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. செயின்ட் காலன் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், 2022 முதல் இன்றுவரை சுவிஸ் மக்களின் எல்லைத் தாண்டிய ஷாப்பிங் பழக்கம் சுமார் 10 சதவீதம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
பங்குபற்றியவர்கள், அண்டை நாடுகளில் விலைகள் குறைவாக இருப்பது தான் வெளிநாட்டில் வாங்குவதற்கான முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தின் ஜெர்மன் மொழிப் பேசும் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகம் செல்வது ஜெர்மனியின் கான்ஸ்டான்ஸ் நகரம். அதேபோல், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிப் பேசும் சுவிஸ் மக்கள் அதிகம் விரும்பும் இடங்கள் முறையே பிரான்ஸின் பாண்டர்லியேர் மற்றும் இத்தாலியின் கோமோ நகரங்களாகும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள விலை நிலவரம், குறிப்பாக உணவு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகள் மற்றும் மின்சாதனங்கள் போன்றவற்றில், அண்டை நாடுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக நுகர்வோர் பொதுவாக உணர்கிறார்கள். அதனால், எல்லையோர பகுதிகளில் வாழும் மக்கள் வார இறுதிகளில் குடும்பத்துடன் வாகனத்தில் சென்று, அதிகளவில் பொருட்களை வாங்கி திரும்புவது வழக்கமாகியுள்ளது.
இந்த ‘ஷாப்பிங் சுற்றுலா’ உள்ளூர் சில்லறை வணிகர்களுக்கு சவாலாக மாறியுள்ளதோடு, நுகர்வோருக்கு செலவினச் சுமையை குறைக்கும் வழியாகவும் திகழ்கிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலையேற்ற சூழலில், இந்த போக்கு இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
© KeystoneSDA