கிரான்ஸ்-மொன்டானா பேரவலம்: வலைஸ் பள்ளிகள் திங்கட்கிழமை வழக்கம்போல் திறப்பு
கிரான்ஸ்-மொன்டானாவில் நிகழ்ந்த தீ விபத்து சுவிட்சர்லாந்து முழுவதும் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வலைஸ் கன்டோனில் உள்ள பள்ளிகள் வருகிற திங்கட்கிழமை வழக்கம்போல் மீண்டும் திறக்கப்படும் என்று கன்டோனல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சமீபத்திய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின் படி, இந்த பேரவலத்தில் 40 பேர் உயிரிழந்ததுடன், 119 பேர் காயமடைந்துள்ளனர்.
வலைஸ் பொருளாதார மற்றும் கல்வித் துறையின் பொதுச் செயலாளர் Pierre-Yves Délèze, கீஸ்டோன்-ஏடிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும். பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கும் வகுப்புகளுக்கும் தேவையான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும்” என்று தெரிவித்தார். நிலைமையை துறை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் மனஅழுத்தங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் கேட்பதற்கான இடங்கள் ஏற்பாடு செய்யப்படுவதுடன், தேவையெனில் உளவியல் நிபுணர்களின் ஆதரவும் வழங்கப்படும். “இளம் வயதினருக்கு ஒன்றுகூடி பேசவும், உணர்வுகளை பகிரவும் இது மிகவும் அவசியமான நேரம்” என்று Délèze குறிப்பிட்டார்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ‘லெ கான்ஸ்டெலேஷன்’ என்ற பாருக்கு சென்றிருந்த இளையர்கள் மற்றும் இளம் பெரியவர்களே இந்த தீ விபத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்களில் மனநல ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் வலைஸ் கன்டோனில் உள்ள Crans-Montana நகரத்தை மையமாகக் கொண்டு நடந்துள்ளது.