புதிய மோசடி முறையை எச்சரிக்கும் சுவிஸ் சைபர் பாதுகாப்பு அமைப்பு
சுவிட்சர்லாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையமான National Cyber Security Centre (NCSC), சமீப காலமாக ஒரு புதிய மோசடி முறையைக் குறித்து அதிகரித்து வரும் புகார்களைப் பெற்றுவருவதாக எச்சரித்துள்ளது. வழக்கமாக காணப்படும் இணைய மோசடிகளுக்கு மாறாக, இந்த புதிய முறையில், பொதுவாக நடைபெறும் போலி இணைப்புகளை கிளிக் செய்யும் அழுத்தம் இல்லாததே இதன் தனிச்சிறப்பாகும்.”
இந்த மோசடி திட்டத்தின் படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனை ஒன்று நடந்துள்ளதாக கூறி தகவல் அனுப்பப்படுகிறது. அதன் பின்னர், அந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெற வேண்டும் என்ற பெயரில் ஒரு தொலைபேசி எண்ணுக்கு மீண்டும் அழைக்குமாறு கூறப்படுகிறது. ஆனால் அந்த எண்ணுக்கு அழைக்கும் நபர்கள், உண்மையான வாடிக்கையாளர் சேவை மையத்துடன் இணைக்கப்படாமல், நேரடியாக மோசடி குழுவின் கால் சென்டருக்கு இணைக்கப்படுவதாக National Cyber Security Centre தெரிவித்துள்ளது.

அங்கு பேசும் மோசடிக்காரர்கள், பரிவர்த்தனைகளை சரிபார்க்க வேண்டும் என்ற போலி காரணத்தை முன்வைத்து, வங்கிக் கணக்கு விவரங்கள், கார்டு தகவல்கள் போன்ற மிக முக்கியமான தனிப்பட்ட நிதி தகவல்களை வெளிப்படுத்துமாறு கேட்கிறார்கள். இதனால் பலர் அறியாமலேயே தங்கள் பணத்தை இழக்கும் அபாயத்தில் சிக்குகின்றனர்.
இந்த புதிய மோசடி முறையை கருத்தில் கொண்டு, National Cyber Security Centre பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய அழைப்புகள் அல்லது செய்திகள் வந்தால், அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு உடனடியாக அழைக்கக் கூடாது என்றும், எந்த சூழலிலும் வங்கி தொடர்பான ரகசிய தகவல்களை தொலைபேசி மூலமாக பகிரக்கூடாது என்றும் அது வலியுறுத்தியுள்ளது. தேவையானால், நேரடியாக தங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறியப்பட்ட தொடர்பு எண்கள் மூலமாக மட்டுமே சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
® KeystoneSDA