Wettingen தபால் நிலையத்தில் ஆயுத முனையில் கொள்ளை – சாட்சிகளை தேடும் பொலிசார்
சுவிட்சர்லாந்தின் Aargau கன்டோனில் உள்ள Wettingen நகரில், வெள்ளிக்கிழமை மாலை தபால் நிலையம் ஒன்றில் ஆயுத முனையில் அச்சுறுத்தலுடன் கொள்ளை நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2025 டிசம்பர் 19 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சற்றுமுன், Wettingen தபால் நிலையத்துக்குள் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்து, ஊழியர்களிடம் பணத்தை ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளார். அவர் கைதுப்பாக்கி ஒன்றை காட்டி அச்சுறுத்தியதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணியாளர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பணத்தை வழங்கியதையடுத்து, அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் நடந்த உடனே பல பொலிஸ் அணிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு, தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இருப்பினும், சந்தேக நபரை கைது செய்ய முடியவில்லை.

பொலிசார் வழங்கிய விவரிப்பின்படி, குற்றவாளி மெலிந்த உடலமைப்புடன், 180 முதல் 190 செ.மீ உயரமுள்ளவராக இருக்கலாம். சம்பவ நேரத்தில் அவர் கருப்பு கால்சட்டை, கருப்பு ஜாக்கெட், மஞ்சள்-பச்சை நிற ஒளிரும் பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்திருந்ததுடன், முகமூடி போட்டிருந்தார். மேலும், கருப்பு நிற விளையாட்டு பையையும் எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக Kantonspolizei Aargau விசாரணைகளைத் தொடங்கியுள்ளதுடன், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
© Kapo AG