சென்ட்கேலன் கன்டோனில் ஏடிஎம் மோசடி: மூன்று பிரெஞ்சு குடிமக்கள் கைது
சுவிட்சர்லாந்தின் சென்ட்கேலன் கன்டோனிலுள்ள போடென்சீ–ரைன்டால் (Bodensee-Rheintal) பகுதியில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் (24.01.2026) பல இடங்களில் நடந்த ஏடிஎம் மோசடி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக மூன்று ஆண்களை சென்ட்கேலன் கன்டோனல் காவல் துறை கைது செய்துள்ளது.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, அந்தப் பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் செலுத்த அல்லது பணம் எடுக்க வந்த பொதுமக்களை குறிவைத்து, மூன்று பேர் அணுகியுள்ளனர். அவர்கள், பரிவர்த்தனையில் ஏதோ தவறு இருப்பதாகக் கூறி, வங்கி அட்டையை மீண்டும் இயந்திரத்தில் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அவ்வாறு செய்த வேளையில், குற்றவாளிகள் ரகசிய எண் (PIN) ஐ கவனித்து நினைவில் வைத்துக் கொண்டு, வங்கி அட்டைகளை மாயமாக கைப்பற்றியுள்ளனர். பின்னர், “ஏடிஎம் இயந்திரம் அட்டையை வைத்துக்கொண்டுவிட்டது” என பொய்யாக கூறி அங்கிருந்து விலகியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, திருடப்பட்ட வங்கி அட்டைகளை பயன்படுத்தி, பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளிலிருந்து பணம் எடுத்துள்ளனர். பயன்படுத்தப்பட்ட வாகனம் குறித்த தகவல்கள் கிடைத்ததையடுத்து, மாலை சுமார் 5 மணியளவில் ரோஷாக் (Rorschach) பகுதியில் அந்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வாகனத்தில் பயணித்த 37, 38 மற்றும் 48 வயதுடைய மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் பிரெஞ்சு குடிமக்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். வாகனத்தை சோதனையிட்ட போது, கூரையின் உள்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணமும், திருடப்பட்ட வங்கி அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
சென்ட்கேலன் கன்டோனின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின் தலைமையில், இந்த வழக்கின் விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் சென்ட்கேலன் கன்டோனில் நடைபெற்ற பல்வேறு இதேபோன்ற மோசடி சம்பவங்களுக்கும் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட குடியேற்ற அலுவலகம், வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த சம்பவம், ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்தும் போது அந்நியர்கள் தலையிடும் சூழ்நிலைகளில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதைக் காவல் துறை மீண்டும் வலியுறுத்துகிறது.Kapo SG