காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர்க்குற்றங்களில் உடந்தையாக செயல்பட்டதாக, சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
25 சுவிஸ் வழக்கறிஞர்கள் இணைந்து இந்த புகாரை தாக்கல் செய்துள்ளனர். பெர்ன் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காசிஸ் மீது போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றில் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, அவருக்கு எதிராக உத்தியோகபூர்வ விசாரணை தொடங்கப்பட வேண்டும் என அந்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, சுவிட்சர்லாந்து ஜெனீவா உடன்படிக்கைகளை மீறி, சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்கத் தவறியுள்ளது.
இஸ்ரேல் இத்தகைய குற்றங்களைச் செய்வதைத் தடுப்பதற்காக, தனது அதிகார வரம்புக்குள் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் காசிஸ் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

குறைந்தபட்சமாக, அவற்றை ஊக்குவிக்காதிருக்க வேண்டிய பொறுப்பும் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், அந்தக் கடமைகளை அவர் நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
மேலும், 2013ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையே கையெழுத்தான இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து வழக்கறிஞர்கள் கடும் விமர்சனம் வெளியிட்டனர்.
“அதன் பின்னர், சுவிட்சர்லாந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு (dual-use) பொருட்களை வாங்கி விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது,” என அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த புகார், காசா நிலவரம் தொடர்பாக உலகளவில் அதிகரித்து வரும் சட்ட மற்றும் அரசியல் அழுத்தங்களின் பின்னணியில், சுவிட்சர்லாந்தின் நடுநிலைக் கொள்கை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.