லூசெர்னில் கைது நடவடிக்கையின் போது போலீசார் காயம், மூவர் கைது
சனிக்கிழமை இரவு (14 பிப்ரவரி 2026) சுமார் 11.30 மணியளவில் லூசெர்ன் (Luzern) நகரில் இடம்பெற்ற கைது நடவடிக்கையின் போது ஒரு பெண் போலீசரும், ஒரு ஆண் போலீசரும் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாசல்ஷ்ட்ராஸ்ஸே (Baselstrasse) பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒருவர் இருப்பதாகவும், அவர் கடந்த வியாழக்கிழமை KKL (Kultur- und Kongresszentrum Luzern) சுற்றுவட்டாரத்தில் பலரை தொந்தரவு செய்ததுடன் சிலரை மிரட்டியதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு இருந்த 27 வயதான மொராக்கோ நாட்டவரை சோதனை செய்து கைது செய்ய முயன்றனர்.

ஆனால் அவர் கைது நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், அப்போது அங்கிருந்த பல Fasnacht கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களும் தலையிட்டு போலீசாரை உடல் ரீதியாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு பெண் போலீசரும் ஒரு ஆண் போலீசரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. காயம் காரணமாக அந்த பெண் போலீசர் தற்காலிகமாக பணியில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து 27 வயதான நபருடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். லூசெர்ன் கன்டோனல் காவல் துறை இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த மோதலை நேரில் கண்டவர்கள் அல்லது வியாழக்கிழமை இரவு KKL பகுதியில் தொந்தரவுக்குள்ளானவர்கள் இருப்பின், தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகவல்களை 041 248 81 17 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.