குடியுரிமை சட்ட மாற்ற முன்மொழிவுக்கு சுவிட்சர்லாந்து கீழவை குழு எதிர்ப்பு
சுவிட்சர்லாந்தில் குடியுரிமை வழங்கும் விதிகளை மத்திய அரசின் பொறுப்பாக மாற்றி, தகுதி பெற வேண்டிய கால எல்லையை குறைக்க முன்வைக்கப்பட்டுள்ள மக்கள் முன்முயற்சியை (Popular Initiative) நாடாளுமன்றத்தின் கீழவை குழு நிராகரித்துள்ளது. தேசிய பேரவைக்கு உட்பட்ட அரசியல் நிறுவனங்கள் குழு, “நவீன குடிமக்கள் உரிமைகளுக்காக (டெமோகிரசி இனிஷியேட்டிவ்)” என்ற இந்த முன்முயற்சிக்கு எதிராக 17 வாக்குகளும், ஆதரவாக 8 வாக்குகளும் அளித்து தீர்மானம் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற சேவைகள் வெள்ளிக்கிழமை அறிவித்தன. இதற்கான மாற்று முன்மொழிவுகளையும் குழு நிராகரித்துள்ளது. இதன் மீது இறுதி முடிவை தேசிய பேரவை முழு அமர்வில் எடுக்கவுள்ளது.
இந்த முன்முயற்சியின் படி, தற்போது கன்டோன்களின் கட்டுப்பாட்டில் உள்ள குடியுரிமை சட்டங்கள் மத்திய அரசின் பொறுப்பாக மாற்றப்பட வேண்டும். மேலும், சுவிட்சர்லாந்தில் சட்டப்படி ஐந்து ஆண்டுகள் வசித்திருப்பவர்களுக்கு, நிரந்தர குடியிருப்பு அனுமதி (C permit) இருந்தாலோ இல்லையோ, குடியுரிமை பெற உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு தேசிய மொழியில் அடிப்படை அறிவு மற்றும் கடுமையான குற்றச்செயல்கள் இல்லாமை ஆகியவை மட்டுமே தகுதி நிபந்தனைகளாக இருக்க வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையில், குறைந்தது பத்து ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வசித்திருக்க வேண்டும் என்பதுடன், C குடியிருப்பு அனுமதி பெற்றவர்களுக்கே குடியுரிமை விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், கன்டோன்கள் மற்றும் நகராட்சிகள் தங்கள் சட்டங்களின் அடிப்படையில், அந்தந்த பகுதிகளில் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்ச வசிப்புக் காலத்தையும் நிர்ணயித்து வருகின்றன.

ஆனால், இந்த முன்முயற்சி அளவுக்கு மீறியதாக உள்ளது என்பதே பெரும்பான்மை குழு உறுப்பினர்களின் நிலைப்பாடு. ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும் குறைந்தபட்ச வசிப்புக் காலத்தையும், கன்டோன் மற்றும் நகராட்சிகளில் இருக்க வேண்டிய கால வரம்புகளை முற்றிலுமாக நீக்குவதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், சமூக ஒருங்கிணைப்பு தொடர்பான நிபந்தனைகள் பெரும்பாலும் நீக்கப்படுவதால், சுவிட்சர்லாந்தின் வாழ்வியல் மற்றும் சமூக சூழல் குறித்த அறிவு இல்லாமல் குடியுரிமை வழங்கப்படும் அபாயம் இருப்பதாகவும் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது குடியுரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், நீடித்த ஒருங்கிணைப்பிற்கும் அவசியமானது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதே நேரத்தில், மக்கள் அதிகமாக இடம்பெயர்ந்து வாழும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, கன்டோன் மற்றும் நகராட்சி வசிப்புக் காலத்தை இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் குழு முன்வைத்துள்ளது. இதன் மூலம், கன்டோன்கள் கூடுதல் நகராட்சி கால வரம்புகளை விதிப்பதைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த முடிவை இப்போது மேலவையான மாநில பேரவைக்கான சம்பந்தப்பட்ட குழு எடுக்கவுள்ளது.
இதற்கிடையில், குழுவில் உள்ள சிறுபான்மை உறுப்பினர்கள் இந்த டெமோகிரசி இனிஷியேட்டிவ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும், சம வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அணுகல் எளிதாகும் என்பதே அவர்களின் வாதமாக உள்ளது. இருப்பினும், மத்திய அரசும் இந்த முன்முயற்சியை ஏற்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.