சென்ட்கேலன் ரயில் நிலையத்தில் குழு தாக்குதல்: 37 வயது நபர் காயம், ஐந்து பேர் கைது
கடந்த சனிக்கிழமை மாலை (31.02.2026), சென்ட்கேலன் (St. Gallen) நகரின் ரயில் நிலைய முன்றலில், 37 வயதுடைய ஒரு சுவிட்சர்லாந்து குடிமகன் ஐந்து இளைஞர்களால் தாக்கப்பட்டு லேசான காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்ட்கேலன் கன்டோனல் காவல் துறை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து நேரில் பார்த்த சாட்சிகளை காவல் துறை தேடி வருகிறது.
மாலை 5.30 மணியளவில், நகரின் பேருந்து நிலையத்தில் உள்ள ‘ஹால்டெகான்டே B’ பகுதியில் இளைஞர்கள் குழு ஒன்று நின்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதே இடத்திற்கு 37 வயது நபர் வந்தபோது, அந்தக் குழுவில் இருந்த 19 வயதுடைய ஒரு ஆப்கானிஸ்தான் இளைஞர் அவரிடம் அருகில் சென்றுள்ளார். சில நிமிடங்களுக்குள் இருவருக்கும் இடையில் உடல் மோதல் ஏற்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த மோதலைத் தொடர்ந்து, அந்தக் குழுவில் இருந்த மேலும் நான்கு இளைஞர்கள் சம்பவத்தில் தலையிட்டு, 37 வயது நபரை குத்து மற்றும் உதை மூலம் தாக்கியுள்ளனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர், ஊன்றுகோலை பயன்படுத்தி அந்த நபரை அடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவத்துக்குப் பிறகு, 19 முதல் 21 வயதுக்கிடையிலான அந்த ஐந்து ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆனால், விரைவில் நகரின் Stadtpolizei St. Gallen பல ரோந்து குழுக்களின் உதவியுடன், கலுஸ் பிளாட்ஸ் (Gallusplatz) பகுதியில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை, சென்ட்கேலன் கன்டோனின் அரசு வழக்குத் துறை தலைமையில் தொடங்கப்பட்டுள்ளதாக சென்ட்கேலன் கன்டோனல் காவல் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிகழும் இவ்வகை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் துறையை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
© Kapo SG