சூரிச்சில் யூத நபர்மீது தாக்குதல்: சந்தேகநபர் கைது
சூரிச் (Zürich) நகரின் Kreis 3 பகுதியில், 2026 பிப்ரவரி 2ஆம் தேதி திங்கள்கிழமை மாலை, ஒரு யூத நபரை உடல் ரீதியாக தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவரை Stadtpolizei Zürich கைது செய்துள்ளது.
மாலை 8.15 மணியளவில், Manessestrasse பகுதியில் ஒருவர் மற்றொருவரால் தாக்கப்பட்டதாக சூரிச் நகர காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், தரையில் ஒருவரை பலர் பிடித்து வைத்திருந்ததை கண்டனர். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்த நபர் சாலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 26 வயதுடைய ஒர்தோடாக்ஸ் யூத இளைஞரை குத்துச்சண்டை மூலம் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை பார்த்த அருகிலிருந்த பலர் உடனடியாக தலையிட்டு, தாக்குதலாளரை கட்டுப்படுத்தி, காவலர்கள் வரும்வரை பிடித்து வைத்திருந்தனர். காவலர்களின் முன்னிலையிலும் கூட, அவர் தொடர்ந்து அவமதிக்கும் வகையிலும் யூத விரோத கருத்துக்களையும் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இளைஞருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் 40 வயதுடைய கொசோவோ நாட்டைச் சேர்ந்தவர் என்றும், சுவிட்சர்லாந்தில் நிலையான வசிப்பிடம் இல்லாதவர் என்றும் கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக காவல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்ப கட்ட விசாரணைக்கு பின்னர், அவர் சூரிச் மாநில வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூகத்தில் மத அடிப்படையிலான வன்முறைகள் குறித்து அதிகரிக்கும் கவலைகளுக்கு மத்தியில், இந்த சம்பவம் மீண்டும் பாதுகாப்பு மற்றும் சகிப்புத்தன்மை தொடர்பான விவாதங்களை முன்னிறுத்தியுள்ளது.