காலாவதியாகும் உணவுப் பொருட்களுக்கு Coop வழங்கும் தள்ளுபடியில் மாற்றம்
சுவிட்சர்லாந்தின் முன்னணி சூப்பர் மார்க்கெட் சங்கமான Coop, உணவுக் கழிவுகளை குறைக்கும் நோக்கில் பல ஆண்டுகளாக ‘Use Instead of Waste’ என்ற தனது நீண்டகாலத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், காலாவதி தேதிக்கு அருகிலுள்ள உணவுப் பொருட்களுக்கு இதுவரை 50 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் வரும் ஜனவரி 6 முதல் இந்தத் தள்ளுபடியில் மாற்றம் செய்யப்படுவதாக Coop அறிவித்துள்ளது. இனிமேல், காலாவதியாக நெருங்கும் உணவுப் பொருட்களுக்கு 50 சதவீதத்திற்கு பதிலாக 40 சதவீத தள்ளுபடி மட்டுமே வழங்கப்படும்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கூப் நிர்வாகம், தள்ளுபடி விகிதம் குறைந்தாலும், வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இதுவரை கடை மூடும் நேரத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இந்தத் தள்ளுபடி வழங்கப்பட்ட நிலையில், இனிமேல் காலாவதி தேதிக்கு மேலும் முன்னதாகவே தள்ளுபடி விலை நிர்ணயிக்கப்படும். இதன் மூலம் அதிகமான வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும் என கூப் தெரிவித்துள்ளது.
உணவுக் கழிவுகளை குறைப்பதும், பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் வீணாகாமல் வாடிக்கையாளர்களிடம் சென்றடைவதும் இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் என Coop கூறுகிறது. சுவிட்சர்லாந்தில் உணவுக் கழிவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் குடும்பச் செலவுக் குறைப்புக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© KeystoneSDA