அமெரிக்கப் பிரஜைகள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் நிலையான பொருளாதாரம், அரசியல் மரபு, மற்றும் பாதுகாப்பான முதலீட்டு தளம் போன்ற ஏதுக்களினால் அமெரிக்கர்கள் அதிக அளவில் சுவிஸ் வங்கிகளை நாடி வருவதாக சர்வதேச வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெனீவாவை தளமாகக் கொண்ட பிரைவேட் வங்கி பிக்டெட், அதன் PNAA (Pictet North America Advisors) சேவையின் மூலம் மார்ச் மாதத்திலிருந்தே புதிய மற்றும் பழைய அமெரிக்க வாடிக்கையாளர்களின் கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் போக்கு தொடர்ந்துள்ளதாகவும் வங்கி பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க வாடிக்கையாளர்கள் தங்களது முதலீட்டுத் தொகுப்புகளை பன்முகப்படுத்த ஆர்வமாக உள்ளனர். குறுகியகால சந்தை அதிர்வுகளை விட நீண்டகால அடிப்படைகளில் கவனம் செலுத்துவதே நல்லது என வொன்டோபெல் ஸ்விஸ் ஃபைனான்ஷியல் அட்வைசர்ஸ் நிர்வாக இயக்குநர் பில்லி ஒப்ரெகான் தெரிவித்துள்ளார்.
2025 ஜூன் மாத நிலவரப்படி 18 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் சொத்துக்கள் வட அமெரிக்காவிலிருந்து வந்துள்ளன. வங்கியின் அடுத்த விரிவாக்கக் கட்டத்தை முன்னெடுக்க அமெரிக்காவில் தனியார் வாடிக்கையாளர்கள் பிரிவு தலைவரையும் நியமித்துள்ளது.
2014 முதல் அமெரிக்க FATCA சட்டம் அமல்படுத்தப்பட்டதால் சுவிஸ் வங்கிகள் அமெரிக்க வாடிக்கையாளர்களின் கணக்குகளை கட்டாயமாக அறிக்கையிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் நிர்வாகச் சுமை மற்றும் சட்ட அபாயங்கள் அதிகரித்தாலும், UBS, ஜூலியஸ் பேரு, பிக்டெட், வொன்டோபெல் போன்ற சில முக்கிய வங்கிகள் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.