புலம்பெயர்தல் ஒத்துழைப்பில் சுவிட்சர்லாந்து – எகிப்து இடையே இரண்டு புதிய ஒப்பந்தங்கள்
சுவிட்சர்லாந்தும் எகிப்தும் புலம்பெயர்தல் தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற சந்திப்பில் சுவிஸ் நீதித்துறை அமைச்சரான பீட் ஜான்ஸ் மற்றும் எகிப்தின் வெளியுறவு அமைச்சரான பட்ர் அப்துலட்டி (Badr Abdelatty) இந்த ஒப்பந்தங்களை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தனர்.
ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட பிறகு ஊடகங்களைச் சந்தித்த பீட் ஜான்ஸ் (Beat Jans), இது இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பின் புதிய கட்டத்தை தொடங்குகிறது என குறிப்பிட்டார். குறிப்பாக, புலம்பெயர்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சவால்களில் இரு நாடுகளும் ஒரு சேர செயல்படுவதற்கான தளத்தை இந்த ஒப்பந்தங்கள் உருவாக்குகின்றன என அவர் வலியுறுத்தினார்.
கையெழுத்திடப்பட்ட முதல் ஒப்பந்தம், எகிப்தை அகதிகளை ஏற்றுக்கொள்கின்ற முக்கிய நாடாக அங்கீகரித்து அதற்கு வழங்கப்படும் ஆதரவை மேலும் அதிகரிப்பதை மையமாகக் கொண்டது. இதன் மூலம் சட்டப்பூர்வ புலம்பெயர்தல் வாய்ப்புகளை மேம்படுத்துதல், மனிதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், தாய்நாட்டிற்கு தன்னார்வ திரும்புதல் மற்றும் மீள் குடியேற்றம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துகின்றன.

இரண்டாவது ஒப்பந்தம், இரு நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு விசா இல்லாமலேயே பயணிக்க அனுமதிக்கும் புதிய ஏற்பாட்டை அறிமுகப்படுத்துகிறது. இது இரு அரசுகளுக்கிடையேயான தொடர்புகளை மேலும் எளிமைப்படுத்தும் என்றும், திடீர் பணிச்செயல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
சுவிட்சர்லாந்து மற்றும் எகிப்து இடையேயான இந்த ஒப்பந்தங்கள், ஐரோப்பாவிற்கான புலம்பெயர்தல் அழுத்தம் அதிகரிக்கும் நேரத்தில் பாதுகாப்பு, புலம்பெயர்தல் மேலாண்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன.