ஸ்விட்சர்லாந்தின் தொழில் உயர்கல்விக்கு புதிய பட்டப் பெயர்களுக்கு பாராளுமன்ற ஒப்புதல்
ஸ்விட்சர்லாந்தின் தொழில் சார்ந்த உயர்கல்வியை சர்வதேச அளவில் மேலும் ஈர்க்கக்கூடியதாகவும், தெளிவாக அங்கீகரிக்கப்படக்கூடியதாகவும் மாற்றும் முயற்சியில், புதிய தொழில்முறை பட்டப் பெயர்களை அறிமுகப்படுத்த தேசியக் கவுன்சில் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் “Professional Bachelor” மற்றும் “Professional Master” போன்ற புதிய பட்டங்கள் ஸ்விட்சர்லாந்தின் உயர்தர தொழில் கல்வி துறையில் பயன்படுத்தப்பட உள்ளன. தொழில் சார்ந்த பயிற்சிகள் மற்றும் மேம்பட்ட தொழில்முறை தகுதிகள், பல நாடுகளில் பல்கலைக்கழக பட்டங்களுடன் ஒப்பிடுகையில் அடிக்கடி புறக்கணிக்கப்பட்டதால், இந்த மாற்றம் உலகளவில் ஸ்விஸ் தொழில்துறை கல்வியின் மதிப்பை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கூட்டாட்சி தொழில்முறை மற்றும் மேம்பட்ட தொழில் தேர்வுகளில் ஆங்கிலமும் ஒரு கூடுதல் தேர்வுத் மொழியாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நிறுவனங்களில் வேலை பார்க்க விரும்பும் மாணவர்களுக்கு இது கூடுதல் நன்மையாக அமையும்.
உலகின் மிகுந்த செயல்திறன் கொண்ட தொழில்முறை கல்வி முறை கொண்ட நாடுகளில் ஸ்விட்சர்லாந்து ஒன்றாக இருந்தாலும், அதன் பட்டங்கள் அனைத்தும் சர்வதேசமாக அறியப்படவில்லை என்ற சவாலுக்கான பதிலாகவே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய பட்டப் பெயர்கள், தொழில்முறை துறையில் பயிலும் இளைஞர்களுக்கு உயர்ந்த மரியாதையும், உலகளாவிய வேலை சந்தையில் போட்டித் திறனையும் வழங்கும் என்று கல்வி வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
© KeystonsSDA