சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விடுமுறை நாட்களின் விலை உயர்ந்துள்ளது. பனிச்சறுக்கு என்பது ஒரு மலிவான பொழுது போக்கு அல்ல என்பது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பலருக்கு தெரிந்த விடயம்.
ஆனால் இந்த குளிர்காலத்தில் ஒரு வாரம் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் விடுமுறையை கழிப்பது முன்பை விட 24 சதவீதம் அதிகமாகும் .
குறிப்பாக பிப்ரவரி மாதத்தில், குழந்தைகள் ஒரு வார கால பள்ளி விடுமுறையில் பனிச்சறுக்கு மலைகளில் விடுமுறையை கழிக்க ஆசைப்படும் பாரம்பரிய மாதமாகும். மேலும் குடும்பங்களும் அந்த விடுமுறைக்காக மலைகளுக்குச் செல்கின்றனர்.
உதாரணமாக, பிப்ரவரி 10 முதல் 17 வரையிலான காலகட்டத்தில்,செலவுகள் சராசரியாக 41 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அதிக விலையுயர்ந்த ஸ்கை பாஸ்களால் மட்டுமல்ல, மலை ரிசார்ட்டுகளில் தங்கும் விடுதிகளின் விலைகளும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே விலை வேறுபாடுகள் உள்ளன.
இந்த தேதிகளில் ஒரு வார பனிச்சறுக்கு டிசினோவில் உள்ள ஐரோலோ ரிசார்ட்டில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 3,543 பிராங்குகள் மற்றும் வலாய்ஸ் மாகாணத்திலுள்ள வெர்பியரில் 6,969 பிராங்குகள் செலவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.