சூரிச்சில் தொலைபேசி மோசடி மூலம் பணம் வசூலிப்பவர் அதிரடி கைது சுவிட்சர்லாந்தில் போலி தொலைபேசி மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுபோன்றதொரு சம்பவம் நேற்று முன்தினம் திங்கள்கிழமை , பிப்ரவரி 12, 2024, சூரிச் தல்விலில் இடம்பெற்றுள்ளது. தொலைபேசி மோசடியில் பணம் வசூலித்த 53 வயது நபர் ஒருவரே சூரிச் கன்டோனல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை காலை, 84 வயதான ஓய்வூதியம் பெறுபவருக்கு வங்கி ஊழியராக குறித்த நபர் தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார். வங்கியில் மோசடி நடந்துள்ளதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
மோசடி செய்யும் ஊழியர்களைப் பிடிக்க விரும்புவதாகவும் போலீசாரிடம் இதுபற்றி கூறியுள்ளதாகவும் குறிப்பிட்ட அந்த நபர் அவள் கணக்கில் இருந்து பல ஆயிரம் பிராங்குகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் சொல்லும் போலீஸ் அதிகாரியிடம் பணத்தை ஒப்படைக்கும்படியும் பின்னர் அவர் உடனடியாக அதை தனது கணக்கிற்கு மாற்றுவார் எனவும் தொலைபேசி அழைப்பு விடுத்த நபர் குறித்த வயோதிப பெண்ணுக்கு கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த பெண் வங்கிக்கு செல்லும் வழியில் வேறு ஒரு நபரிடம் ஏதேச்சையாக இது பற்றி பேசியுள்ளார். இது ஒரு மோசடி தொலைபேசி என்பதை மூன்றாம் நபர் புரிந்துகொண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
இதன் பின்னணியில், கன்டோனல் போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். சிறிது நேரத்திற்குப் பிறகு 53 வயதான போஸ்னியாவைச் சேர்ந்த பணத்தை வசூலிக்க வந்த நபரை கைது செய்தனர்.
அவர் இதுபோன்று மேலும் பல குற்றங்களை செய்துள்ளரா என்பது தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கோண்டு வருகின்றார்கள். எனினும் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருவதால் பொதுமக்களை மிகவும் விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.