ஜெனீவாவின் ஓநெக்ஸ் பகுதியில் நடந்த கொடூர கொள்ளை: ஒரு வருடமாக தீராத குடும்ப வேதனை
ஜெனீவா கன்டோனில் உள்ள ஓநெக்ஸ் (Onex) பகுதியில் கடந்த ஆண்டு நடந்த ஒரு கொடூரமான வீட்டுக்குள் புகுந்து தாக்கிய சம்பவம், இன்று வரை அந்த குடும்பத்தின் மனதில் ஆறாத காயமாகவே இருந்து வருகிறது. 92 வயதான மூதாட்டி ஒருவர், தன்னுடைய குடியிருப்புக் கட்டிடத்தில் நுழையும் போது பின்னால் வந்த மூன்று இளையர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து, அவரது வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அந்த மூதாட்டியை தரையில் தள்ளி, அடித்து, கத்தியை காட்டி மிரட்டி, வாயை அடைத்து வைத்துவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த உடனேயே குற்றம் சாட்டப்பட்ட மூன்று சிறார்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றத்தில் ஈடுபட்ட இளம்பெண்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 15,000 சுவிஸ் ஃப்ராங்க் (CHF 15,000) செலுத்த உத்தரவிடப்பட்டார். இருப்பினும், இந்த தண்டனை மற்றும் இழப்பீடு குடும்பத்தின் மன வேதனைக்கு ஈடாக இல்லை என்பதே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு அந்த மூதாட்டி கடுமையான மனஅழுத்தத்துக்கும் பயத்துக்கும் ஆளாகியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் வசித்த வீட்டில் இனி தனியாக வாழ முடியாத நிலையில், தற்போது பாதுகாப்பான சிறப்பு வசதிகள் கொண்ட தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். “உடலில் ஏற்பட்ட காயங்களை விட, மனதில் ஏற்பட்ட பாதிப்பே அதிகம்” என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஜெனீவா பகுதியில் சமீப ஆண்டுகளில் முதியவர்களை குறிவைத்து நடக்கும் கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இவ்வகை குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
© WRS