பயணிகளுக்கான சிறந்த வசதிகள் கொண்ட தொடருந்து நிலையமாக சூரிச் தேர்வு
சுவிட்சர்லாந்தின் Zurich நகர மத்திய தொடருந்து நிலையமான Zurich HB, உலகளவில் பயணிகளுக்கான “சிறந்த பிரீமியம் அனுபவத்தை” வழங்கும் தொடருந்து நிலையமாக புதிய சர்வதேச தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பயண காப்புறுதி நிறுவனம் உலகின் 40 முக்கிய தொடருந்து நிலையங்களை ஆய்வு செய்து இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளது. பயணிகள் ஓய்வு அறைகள், உணவக வசதிகள், ஷாப்பிங் மையங்கள் மற்றும் உயர்தர ஹோட்டல்களுக்கு அருகாமை போன்ற அம்சங்கள் அடிப்படையாக கொண்டு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், Zurich HB தனது பரந்த கட்டமைப்பு, துல்லியமான சேவை மற்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் உயர்தர அனுபவம் காரணமாக அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் நிலையமாக இருந்தாலும், அதன் ஒழுங்குமுறை மற்றும் வசதிகள் தொடர்ந்து உயர்ந்த தரத்தில் பராமரிக்கப்படுவதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swiss Federal Railways (SBB) நிர்வகிக்கும் Zurich HB, சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான தொடருந்து நிலையமாகும். உள்நாட்டு மற்றும் சர்வதேச ரயில் சேவைகளின் முக்கிய மையமாக இருக்கும் இந்த நிலையம், ஐரோப்பாவின் பல முக்கிய நகரங்களுடன் நேரடி இணைப்புகளையும் வழங்குகிறது.
மேலும், நிலையத்திற்குள் உள்ள பிரபல வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பயணிகளுக்கான உயர்தர சேவைகள் காரணமாக இது சாதாரண ரயில் நிலையத்தை விட ஒரு நவீன நகர மைய அனுபவத்தை வழங்குவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.