சுவிட்சர்லாந்தில் Swisscard வேலைவாய்ப்பு குறைப்பு
சுவிட்சர்லாந்தில் கிரெடிட் கார்டு சேவைகளை வழங்கும் Swisscard நிறுவனம் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணியிடங்களை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்த மாற்றம் மே 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், சூரிச்ச் கன்டோனில் உள்ள ஹோர்கன் (Horgen) தலைமையகத்தில் 40 பணியிடங்கள் நீக்கப்பட உள்ளன.
நிறுவனத்தின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என Swisscard தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை மற்றும் சந்தை போட்டிகளை முன்னிட்டு, செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் சமீப காலமாக பல நிறுவனங்கள் இதேபோன்ற பணியாளர் குறைப்புகளை மேற்கொண்டு வருகின்றன. சில நிறுவனங்கள் பத்துக்கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகளை குறைத்துள்ள நிலையில், Swisscard நிறுவனமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
இந்த நிலை, நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பொருளாதார நிலைமை குறித்து கவலைகளை எழுப்பி வருகிறது. தொழில்நுட்ப மாற்றங்கள், டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சி மற்றும் செலவு குறைப்புத் திட்டங்கள் போன்றவை நிறுவனங்களை இத்தகைய கடின முடிவுகளை எடுக்கத் தள்ளிவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.