ஜெனீவாவில் தனியார் விமான கண்காட்சி ரத்து
சுவிட்சர்லாந்தின் Geneva நகரில் நடைபெற இருந்த முக்கியமான தனியார் விமானத் துறை கண்காட்சி இந்த ஆண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய வணிக விமானப் போக்குவரத்து மாநாடு மற்றும் கண்காட்சி என அறியப்படும் European Business Aviation Convention and Exhibition (EBACE), ஜூன் மாதத்தில் Palexpo மையத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த நிகழ்விற்கு முன்பை போல போதுமான ஆர்வம் இல்லாததால், அதை நடத்துவது சாத்தியமில்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டிலிருந்து தனியார் விமானத் துறைக்கான முக்கிய சந்திப்பு மேடையாக விளங்கிய இந்த கண்காட்சி, அண்மைக் காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.

சந்தை நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், பங்கேற்பாளர்கள் குறைவடைதல், மேலும் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்கள் ஆகியவை இந்த முடிவிற்கு காரணமாகக் கூறப்படுகின்றன. அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் விமானப் பயணங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்ற காரணத்தால், இத்தகைய சேவைகளை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இந்த நிலையில், நீண்ட காலமாக நடைபெற்றுவரும் இந்த கண்காட்சி ரத்து செய்யப்பட்டிருப்பது, தனியார் விமானத் துறையின் தற்போதைய நிலையை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.