சுவிட்சர்லாந்தில் உலக வெப்பமயமாதல் வேகமாக அதிகரிப்பு
உலக வெப்பமயமாதல் குறித்து பல ஆண்டுகளாகவே எச்சரிக்கைகள் வெளியாகி வந்தாலும், சுவிட்சர்லாந்தில் அதன் தாக்கம் மற்ற பல பகுதிகளை விட அதிகமாக உள்ளது என்பதைக் காட்டும் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. Swiss Academy of Sciences வெளியிட்ட இந்த ஆய்வு அறிக்கையை 60க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
1864 ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து இன்று வரை, சுவிட்சர்லாந்தின் சராசரி வெப்பநிலை சுமார் 1.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது உலகளாவிய சராசரி வெப்பநிலை உயர்வை விட இருமடங்கு அதிகமாக இருப்பது கவலைக்கிடமானதாகும்.

இந்த வெப்பநிலை உயர்வு ஏற்கனவே உச்சத்தை எட்டிவிட்டது என நினைக்க முடியாது என்றும், மாறாக இது தொடர்ந்து வேகமடைந்து கொண்டே இருக்கிறது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனால் எதிர்காலத்தில் பனிமலைகள் கரையும் வேகம் அதிகரிப்பதோடு, நீர்வளத்திலும், சுற்றுச்சூழல் சமநிலையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சுவிட்சர்லாந்து போன்ற மலைப்பாங்கான நாடுகளில், வெப்பநிலை மாற்றங்கள் நேரடியாக பனிப்பாறைகள் மற்றும் இயற்கை சூழலுக்கு தாக்கம் ஏற்படுத்துவதால், அதன் விளைவுகள் உலகின் பிற பகுதிகளை விட விரைவாக உணரப்படுகின்றன. இதனால் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.