வளர்ச்சி உதவித் தொகை குறைப்புக்கு சுவிஸ் மக்களின் எதிர்ப்பு
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு வளர்ச்சி உதவிக்கான நிதியை மேலும் குறைப்பதை பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர். குறிப்பாக, உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிக்கும் நோக்கத்திற்காக கூட இந்த நிதியை குறைக்கக் கூடாது என்ற நிலைப்பாடு பொதுமக்களிடையே காணப்படுகிறது. ETH Zurich வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வில் 4,305 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பின் படி, 77 சதவீதம் பேர் வளர்ச்சி ஒத்துழைப்பு மற்றும் வறுமை குறைப்பு தொடர்பான அரச செலவுகள் அதே நிலைமையில் தொடரவோ அல்லது மேலும் அதிகரிக்கவோ வேண்டும் என்று கருதுகின்றனர். இது இடதுசாரி அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களிடம் மட்டும் அல்லாமல், வலதுசாரி எண்ணக்கருவை கொண்டவர்களிடமும் பெரும்பான்மையாக ஆதரவு பெற்றுள்ளது. குறிப்பாக வலதுசாரி கருத்து கொண்டவர்களில் 58 சதவீதம் பேர் கூட நிதி குறைப்புக்கு எதிராக உள்ளனர்.
மேலும், சஹாரா தெற்குப் பகுதி ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்படும் உதவி குறைக்கப்படக்கூடாது என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர். உக்ரைனுக்கான உதவியை அதிகரிப்பதற்காக அந்த பிராந்தியத்திற்கு வழங்கப்படும் நிதியை குறைப்பதை 49 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர். 32 சதவீதம் பேர் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. இதற்கு ஆதரவு அளிப்பவர்கள் 19 சதவீதம் மட்டுமே.

இதற்கிடையில், 2025 முதல் 2028 வரை வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்புக்காக சுவிஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிதி, மத்திய அரசான கூட்டாட்சி கவுன்சில் ஆரம்பத்தில் முன்மொழிந்த அளவைக் காட்டிலும் சுமார் 1.5 பில்லியன் ஃப்ராங்குகள் குறைவாக உள்ளது. இது மொத்தத்தில் 18 சதவீத குறைப்பை குறிக்கிறது. தற்போது இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதி 11.1 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும்.
அதே நேரத்தில், இந்த நிதியில் சுமார் 14 சதவீதம் உக்ரைனுக்கான உதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மனிதாபிமான உதவிகளில் சமநிலை காக்க வேண்டும் என்ற கருத்து சுவிட்சர்லாந்து மக்களிடையே வலுவாக இருப்பதை இந்த ஆய்வு தெளிவாக காட்டுகிறது.