ப்ரீபோர்க் அகதி மையத்தில் கத்தி அச்சுறுத்தல்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் அகதி காயம்
சுவிட்சர்லாந்தின் ப்ரீபோர்க் (Fribourg) நகரில் உள்ள தஞ்சம் மையத்தில் நடந்த சம்பவத்தில், போலீசார் மீது கத்தியுடன் தாக்க முயன்றதாக கூறப்படும் அகதி ஒருவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (12 மார்ச் 2026) பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், ப்ரீபோர்க் கன்டோனல் காவல் துறையினர் (Kantonspolizei Freiburg) மனநல சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவரைத் தேடும் நடவடிக்கையின் போது ப்ரீபோர்க் நகரில் உள்ள லா பொயா (La Poya) தஞ்சம் மையத்திற்குச் சென்றனர்.
அங்கு சென்ற போலீசார், தேடப்பட்ட அந்த நபர் அங்கு இருப்பதை கண்டறிந்தனர். அவர் 21 வயதுடைய சுடான் நாட்டைச் சேர்ந்த அகதி என தெரியவந்துள்ளது. விசாரணையில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய காரணங்களால், அந்த நபர் போலீசாரை கத்தியுடன் அச்சுறுத்தி தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சூழ்நிலையில், ஒருபோலீஸ் அதிகாரி முதலில் டேசர் (Taser) எனப்படும் மின்சார அதிர்ச்சி வழங்கும் கருவியை பயன்படுத்தி அந்த நபரை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அது தாக்கம் ஏற்படுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி தனது சேவை துப்பாக்கியை பயன்படுத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த அகதி காயமடைந்தார். பின்னர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட அவசர மருத்துவப் பணியாளர்களும் அவருக்கு முதலுதவி வழங்கி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து குற்றப்பிரிவு விசாரணையை அரசு வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கியுள்ளது. இந்த விசாரணையை நியுஷாட்டெல் கன்டோனல் காவல் துறையின் (Kantonspolizei Neuenburg) குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தின் சூழ்நிலைகள் மற்றும் துப்பாக்கி பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதால், தற்போதைக்கு அதிகாரிகள் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை. © Kapo FR