மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுவிஸ் சுற்றுலாப் பயணிகள் சம்பள இழப்பு அபாயத்தில்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ஈரான் மீதான வான்தாக்குதல்களின் தாக்கம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான சுவிஸ் குடிமக்கள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர். அபுதாபி, தோஹா மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் சுமார் 4,000 சுவிஸ் நாட்டவர்கள் தங்கியுள்ள நிலையில், அவர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
போர்மூட்டமான சூழ்நிலை காரணமாக பல விமான நிறுவனங்கள் தங்களின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதன் விளைவாக, சுவிட்சர்லாந்துக்கு திரும்ப திட்டமிட்டிருந்த பலர் விமான ரத்து காரணமாக அங்கு சிக்கித் தவிக்கின்றனர். இவர்கள் பலரும் வேலைக்காக அல்லது குடும்ப காரணங்களுக்காக குறுகிய கால பயணமாக மத்திய கிழக்கிற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பள இழப்பு என்ற புதிய கவலைவும் எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பொருளாதார விவகாரங்களுக்கான அரசுத் துறை செயலாளர் அலுவலகமான State Secretariat for Economic Affairs (SECO) வெளியிட்ட தகவலின்படி, விமான ரத்து போன்ற காரணங்களால் பணிக்கு வர முடியாத சூழ்நிலையில், அதன் பொறுப்பு பொதுவாக ஊழியர்மீதே இருக்கும் என்று சுவிஸ் தொழிலாளர் சட்டம் குறிப்பிடுகிறது.
அதாவது, வேலைக்கு நேரத்தில் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், அதற்கான சம்பளத்தை நிறுவனம் கட்டாயமாக வழங்க வேண்டும் என்ற சட்டப்பூர்வ உத்தரவாதம் இல்லை. சம்பளத்தை தொடர்ச்சியாக வழங்குவது குறித்த முடிவு, சம்பந்தப்பட்ட வேலை ஒப்பந்தம் அல்லது கூட்டு தொழிலாளர் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என SECO விளக்கியுள்ளது.

சுவிஸ் ஊழியர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான தான்யா ரீப்ஸ்ஹோஃப் கூறுகையில், சுவிட்சர்லாந்தில் தொழிலாளர் சட்டம் தானாகவே சம்பளத்தை உறுதி செய்யாது என்பது பலருக்கும் தெரியாத உண்மை எனத் தெரிவித்தார். இதனால் வெளிநாடுகளில் அவசர சூழ்நிலையில் சிக்கியுள்ள ஊழியர்கள் எதிர்பாராத பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றார்.
சர்வதேச அரசியல் பதற்றங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் சுவிஸ் குடிமக்கள் பாதுகாப்பு மட்டுமல்லாமல், சட்ட மற்றும் தொழில்வாய்ப்பு விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. விமான சேவைகள் மீண்டும் வழமையான நிலைக்கு திரும்பும் வரை, மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுவிஸ் குடிமக்கள் தங்களின் பணிநிலையும் வருமானமும் குறித்து அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
சுவிஸ் தொழிலாளர் சட்டம், விமான ரத்து, இயற்கை பேரழிவு அல்லது போர் போன்ற அவசர நிலைகளில் ஊழியர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பளிக்கிறது என்பது குறித்து தற்போது பல தரப்பிலும் விவாதம் எழுந்துள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய அவசர சூழ்நிலைகளில் ஊழியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க சட்ட திருத்தங்கள் தேவைப்படலாம் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.
© KeystoneSDA