சூரிச்சில் திருநங்கை, non-binary மக்களுக்கான நீச்சல் பயிற்சி விவகாரம் சர்ச்சை
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் திருநங்கை மற்றும் நான்பைனரி (non-binary) நபர்களுக்காக தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் நீச்சல் பயிற்சி வகுப்புகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் வலதுசாரி கட்சியான Swiss People’s Party (SVP) சூரிச் கிளை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், நகராட்சி நிர்வாகம் இந்த முயற்சியை வலுவாக பாதுகாத்துள்ளது.
Zurich நகராட்சி கவுன்சில் வெளியிட்ட விளக்கத்தின் படி, ஒரு உள்ளூர் பள்ளியின் நீச்சல் குளத்தில் குறிப்பிட்ட நேரங்களில் இந்த சிறப்பு அணுகல் வழங்கப்படுகிறது. இது “தங்களை ஒரே பாலினத்துடன் மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்கள் அல்லது பிறக்கும் போது வழங்கப்பட்ட பாலின அடையாளத்துடன் தங்கள் தற்போதைய அடையாளம் பொருந்தாதவர்கள்” ஆகியோருக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்று கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் சமத்துவம் மற்றும் சமூக உட்பிரவேசத்தை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக நகராட்சி கூறுகிறது. குறிப்பாக, பாலின அடையாளம் தொடர்பான சமூக அழுத்தங்கள் காரணமாக பொதுவான நீச்சல் குளங்களில் சிரமம் அனுபவிக்கும் நபர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாக விளக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்த வகுப்புகளில் கலந்து கொள்பவர்கள் உண்மையில் non-binary அல்லது திருநங்கை நபர்களா என்பதை தனியாக சரிபார்க்கப்படுவதில்லை. “அவ்வாறு விசாரிப்பது அவர்களின் தனியுரிமை உரிமையை மீறும் செயல் ஆகும்” என்று நகராட்சி கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. பாலின அடையாளம் என்பது தனிப்பட்ட உரிமை எனும் அடிப்படையில், நம்பிக்கை முறையே பின்பற்றப்படுகின்றது.
இந்நிலையில், SVP கட்சி இந்த திட்டம் பொதுப் பயன்பாட்டு வசதிகளில் தேவையற்ற பிரிவினையை ஏற்படுத்துகிறது என்றும், வரிப்பணத்தில் நடத்தப்படும் பள்ளி வளாகங்களில் இத்தகைய தனிப்பட்ட அணுகல் வழங்கப்படுவது சரியானதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சூரிச் SVP அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பாலின அடையாளம் மற்றும் LGBTQ+ உரிமைகள் தொடர்பான விவாதங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் சமூக உட்பிரவேசத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, சில அரசியல் வட்டாரங்களில் இருந்து எதிர்ப்பும் எழுகின்றது