டிசினோ கன்டோனில் பொம்மை துப்பாக்கி விவகாரம்; சட்ட மாற்றம் குறித்து விவாதம்
சுவிட்சர்லாந்தில் உண்மையான ஆயுதங்களைப் போன்ற தோற்றம் கொண்ட பொம்மை பொருட்களுக்குப் பொருந்தும் கடுமையான சட்ட விதிகள் குறித்து புதிய விவாதம் எழுந்துள்ளது. டிசினோ கன்டோன் (Tessin) சேர்ந்த பெண் ஆன்லைனில் வாங்கிய நீர்த்துப்பாக்கி தொடர்பான வழக்கே இதற்குக் காரணமாகியுள்ளது.
அந்த பெண் சுமார் 2.78 சுவிஸ் பிராங்க் மதிப்பிலான ஒரு நீர்த்துப்பாக்கியை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்திருந்தார். உள்ளூர் கார்னிவல் விழாவில் போலீஸ் வேடம் அணிய விரும்பியதால்தான் அவர் அதை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பொருள் அவரிடம் வந்து சேரவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, சுவிஸ் சுங்கத்துறை அந்த பொருளை ஆயுதச் சட்ட மீறலாகக் கருதி பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, இரண்டு போலீசார் அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சுவிட்சர்லாந்தில் உண்மையான ஆயுதங்களைப் போலத் தோற்றமளிக்கும் பொம்மைகள் கூட சட்டத்தின் கீழ் ஆயுதமாகவே வகைப்படுத்தப்படுகின்றன. இத்தகைய பொருட்களை நாட்டுக்குள் இறக்குமதி செய்வது அல்லது பொதுமக்கள் இடங்களில் காட்டுவது குற்றமாகக் கருதப்படலாம். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் ஆயுதத்தை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு வழக்கறிஞர் தலையீட்டின் மூலம் அந்த தண்டனை குறைக்கப்பட்டு 150 சுவிஸ் பிராங்க் ஒத்திவைக்கப்பட்ட அபராதமாக மாற்றப்பட்டது.
“ஒரு நீர்த்துப்பாக்கிக்காக நீதித்துறை வரை விஷயம் சென்றுவிட்டது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சட்டத்தின் கடுமை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீப ஆண்டுகளில் உண்மையான ஆயுதங்களைப் போன்ற தோற்றமளிக்கும் பொம்மைகள் பொதுச் சமாதானத்திற்கு சிக்கல்கள் ஏற்படுத்திய பல சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 2025 மே மாதத்தில் சூரிச் (Zürich) கன்டோனில் 15 வயது சிறுவன் ஒருவர் உண்மையான ஆயுதம் போலத் தோன்றிய நீர்த்துப்பாக்கியை பயன்படுத்தியதால் பெரிய அளவிலான போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னர் 2024 ஜூன் மாதத்தில், பெல்லின்சோனா (Bellinzona) நகரில் ஒரு மாணவன் ஆசிரியரை போலியான துப்பாக்கியால் மிரட்டிய சம்பவம் காரணமாக ஒரு பள்ளி காலி செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயுதச் சட்டம் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 2,000 விசாரணைகளை சுவிட்சர்லாந்து அரசுத் தரப்பு நடத்தி வருகிறது. இதனால் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் தேவையற்ற வேலைப்பளு அதிகரிக்கிறது எனக் கூறி வலைஸ் (Valais) கன்டோனைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீட் ரீடர் (Beat Rieder) சிறிய அளவிலான வழக்குகளில் சுமையை குறைக்க வேண்டும் என்ற முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், சுவிஸ் அரசு தற்போது ஆயுதச் சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. எதிர்காலத்தில் சுவிட்சர்லாந்தில் தடைசெய்யப்பட்டிருக்கும் போலியான ஆயுதங்களை விற்பனை செய்யும் பெரிய ஆன்லைன் தளங்கள் அவற்றை தெளிவாகக் குறியிட வேண்டும் என்ற கட்டாயம் விதிக்கப்படலாம். இந்த விதியை மீறினால் அந்த நிறுவனங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Kapo TI