மதச் சின்னம் தொடர்பான சர்ச்சை: சூரிச் நகர சபை உறுப்பினருக்கு தண்டனை
சூரிச் (Zurich) நகர சபை உறுப்பினராக இருந்த சானிஜா அமெதி (Sanija Ameti) மீது தொடரப்பட்ட வழக்கில், சூரிச் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு சுதந்திரத்தை பாதித்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நிபந்தனை அடிப்படையிலான பணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, 34 வயதான அமெதிக்கு 60 நாளாந்த அலகுகள் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளாந்த அலகுக்கும் 50 சுவிஸ் ஃப்ராங்குகள் என மொத்தமாக 3,000 ஃப்ராங்குகள் அளவிலான பணத் தண்டனை இது. எனினும், இந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட (suspended sentence) வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டாலும், தண்டனையின் அளவை குறைத்துள்ளது. அரசு வழக்கறிஞர் தரப்பில், 100 நாளாந்த அலகுகள், ஒவ்வொன்றும் 100 ஃப்ராங்குகள் மதிப்பில், அதற்கு மேலாக 2,500 ஃப்ராங்குகளைத் தாண்டும் அபராதம் விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
2024 செப்டம்பர் 6ஆம் தேதி நடந்த சம்பவம் இந்த வழக்கிற்கு அடிப்படையாக அமைந்தது. அப்போது கிரீன் லிபரல் கட்சி (PVL) சார்பில் சூரிச் நகர சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமெதி, தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளக் கணக்கில் சர்ச்சைக்குரிய படங்களை பகிர்ந்திருந்தார். அதில், மாதா மரியாள் குழந்தையுடன் உள்ள ஓவியத்தில் இருவரின் முகங்களிலும் துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட துளைகள் காணப்படும் வகையில் ஒரு படம் இடம்பெற்றிருந்தது. அதனுடன், துப்பாக்கி சுடும் நிலையில் தன்னைப் படம் பிடித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவுகள் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை அவமதிப்பதாகவும், வழிபாட்டு சுதந்திரத்தை பாதிப்பதாகவும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தின. அதன் தொடர்ச்சியாகவே, அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்றைய தீர்ப்பிற்கு வழிவகுத்தது. இந்த வழக்கு, சுவிட்சர்லாந்தில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கைகளுக்கான மரியாதை ஆகியவற்றுக்கிடையிலான எல்லைகள் குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது.