சுவிட்சர்லாந்தில் குடியேற்ற வேகம் குறைவு, வெளியேறும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு
கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்துக்குள் குடியேறும் மக்களின் எண்ணிக்கை மந்தமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதே காலகட்டத்தில், வெளிநாட்டு குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2024 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் குறைவான வெளிநாட்டவர்கள் மட்டுமே சுவிட்சர்லாந்துக்கு குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு மாநில செயலகம் (State Secretariat for Migration) வெளியிட்ட அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டில் சுமார் 83,000 வெளிநாட்டு குடிமக்கள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறியுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட சுமார் 5 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில், சுமார் 165,000 வெளிநாட்டு குடிமக்கள் மட்டுமே சுவிட்சர்லாந்துக்கு குடியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2024 ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 3 சதவீதம் குறைவாக உள்ளது.

இதன் விளைவாக, வெளிநாட்டு குடியேற்றத்தின் நிகர எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான நிகர குடியேற்றம் சுமார் 75,000 பேர் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 10 சதவீதம் குறைவு என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையுடைய நாடுகளில் இருந்து வரும் குடியேற்றமும் 2024 ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 5 சதவீதம் குறைந்துள்ளது. பெரும்பாலானவர்கள் வேலை வாய்ப்புகளின் காரணமாகவே சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அப்பாற்பட்ட மூன்றாம் நாடுகளிலிருந்து வரும் புதிய குடியேற்றங்கள் சுமார் 20 சதவீதம் வரை குறைந்துள்ளன.
2025 ஆண்டு முடிவில், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 2.4 மில்லியனாக இருந்துள்ளது. இது மொத்தம் சுமார் 9.1 மில்லியன் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க ஒரு பங்காகும். தொழில்சந்தை நிலை, பொருளாதார சூழல் மற்றும் சர்வதேச அரசியல் மாற்றங்கள் ஆகியவை இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணிகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.