சுவிட்சர்லாந்து தீ விபத்து வழக்கில் சந்தேக நபர் பிணையில் விடுவிப்பு: இத்தாலி கடும் எதிர்ப்பு
புத்தாண்டு தினமன்று சுவிட்சர்லாந்தில் நடந்த பாரிய தீ விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைக்கு இத்தாலி அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கிரான்ஸ்-மொண்டானா பகுதியில் உள்ள ‘லே கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) என்ற மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பலர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என்பதும் இந்தச் சம்பவத்தின் கொடூரத்தைக் காட்டுகிறது.
இந்த விபத்து தொடர்பில் அந்த விடுதியின் உரிமையாளரான ஜாக் மொரெட்டி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இத்தாலி அரசு சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, சுவிட்சர்லாந்தில் பணியாற்றி வந்த இத்தாலி தூதரை ஆலோசனைக்காக ரோமுக்கு திரும்ப அழைக்கும் முடிவையும் இத்தாலி எடுத்துள்ளது.
ஜாக் மொரெட்டி மற்றும் அவரது மனைவி ஜெசிக்கா ஆகியோர், கவனக்குறைவால் மனித உயிரிழப்பு உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மொரெட்டி ஜனவரி 9ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தின் இந்த முடிவை இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கடுமையாக விமர்சித்துள்ளார். மொரெட்டியின் பிணையில் விடுவிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமரியாதை செய்வதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஒரு அவமானமாகவும் பார்க்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆறு பேர் இத்தாலியர்கள் என்பதுடன், காயமடைந்தவர்களில் 10 பேர் இத்தாலியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாலி அரசு வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மெலோனி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் அன்டோனியோ தாஜானி ஆகியோர், சுவிட்சர்லாந்தின் வாலே கன்டோனின் தலைமை அரசு வழக்கறிஞர் பீட்ரிஸ் பிலூத் அவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு, மொரெட்டியின் விடுதலை தொடர்பாக இத்தாலியின் கடுமையான கண்டனத்தை தெரிவிக்குமாறு தூதருக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் தீவிரம், சந்தேக நபர் தப்பிச் செல்லும் அபாயம் மற்றும் ஆதாரங்கள் அழிக்கப்படும் சாத்தியம் இருந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இந்த பேரழிவுக்குப் பின் உண்மை மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே இத்தாலி முழுவதின் எதிர்பார்ப்பு. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனை மற்றும் உணர்வுகளை முழுமையாக கருத்தில் கொண்டு மரியாதைக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட தூதரக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, இத்தாலி தூதர் ஜியான் லோரென்சோ கோர்னாடோ ரோமுக்கு திரும்ப அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வாலே கன்டோனின் அரசு வழக்கறிஞர் பிலூத், இத்தாலி தூதர் தன்னை தொடர்பு கொண்டதை உறுதிப்படுத்தியதுடன், மொரெட்டியின் விடுதலை தனிப்பட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே நடைபெற்றதாக விளக்கமளித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கிடையே தூதரக சிக்கல் உருவாகக் கூடாது என்றும், எந்த வெளிநாட்டு அழுத்தத்திற்கும் தாம் உடன்பட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
© KeystoneSDA