பிப்ரவரி ஸ்கீ விடுமுறைகள்: சுவிட்சர்லாந்து சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை
வரும் பிப்ரவரி மாத ஸ்கீ விடுமுறைகளின் போது சுவிட்சர்லாந்து முழுவதும் சாலைப் போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும் என சுவிட்சர்லாந்து கூட்டாட்சி சாலைகள் அலுவலகமான ASTRA எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக குளிர்கால விளையாட்டு பகுதிகளுக்குச் செல்லும் வழித்தடங்கள், மிட்டெலாண்டு பகுதிகளின் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்களின் புறநகர் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் முழுவதும், குறிப்பாக வார இறுதி நாட்களில், விடுமுறை மற்றும் சுற்றுலா பயணங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் தீவிரமாக இருக்கும் என ASTRA தெரிவித்துள்ளது. A1, A2, A3, A8, A9 மற்றும் A13 போன்ற முக்கிய அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சூரிச் (Zurich), பெர்ன் (Bern), பாசல் (Basel), லூசேர்ன் (Luzern), கூர் (Chur) மற்றும் லுகானோ (Lugano) போன்ற நகரப் பகுதிகளிலும் போக்குவரத்து அழுத்தம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சான்-பெர்னார்டினோ வழித்தடத்தில் சார்கன்ஸ் (Sargans) முதல் துசிஸ் (Thusis) வரை, கோத்தார்ட் சாலை சுரங்கம் (Gotthard road tunnel) பகுதியில், பெர்னர் ஓபர்லாந்த் மற்றும் வலைஸ் (Valais) பகுதிகளுக்குச் செல்லும் பாதைகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் நெரிசல் ஏற்படும் போது, மாற்று சிறிய சாலைகளில் செல்லாமல், அதிவேக சாலைகளிலேயே பயணிகள் தொடர வேண்டும் என ASTRA வலியுறுத்தியுள்ளது. மாற்றுப் பாதைகளை பயன்படுத்துவதால் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் கூடுதல் சுமை ஏற்பட்டு, உள்ளூர் மக்கள், பேருந்துகள், தபால் பேருந்துகள் மற்றும் அவசர சேவைகள் பாதிக்கப்படுவதுடன் விபத்து அபாயமும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்லைச் சாவடிகளில் காத்திருப்பு நேரம் ஏற்படலாம் என்றும், கார் ஏற்றுச் செல்லும் ரயில் சேவைகளில் குறிப்பிட்ட நேரங்களில் தாமதம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிப்ரவரி 6 முதல் 22 வரை இத்தாலியின் மிலானோ–கோர்டினா (Milano-Cortina) நகரங்களில் நடைபெற உள்ள 2026 ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுகள் காரணமாக, கிரௌவுண்டன் (Graubünden) கன்டோன் வழியாக செல்லும் சில பாதைகளில் கூடுதல் போக்குவரத்து ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
© Bundesamt für Strassen ASTRA