வலைஸ் கன்டோனில் போலி காவலர்கள் மோசடி: மூத்த குடிமக்கள் குறிவைப்பு
சுவிட்சர்லாந்தின் வலைஸ் (Valais) கன்டோனில், போலி காவலர்கள் மற்றும் போலி வங்கி ஊழியர்கள் பெயரில் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக வலைஸ் கன்டோனல் காவல் துறை எச்சரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 17 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் இது 31 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இதுவரை 22 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த மோசடிகளின் முக்கிய இலக்கு மூத்த வயதுடையவர்கள் என காவல் துறை கூறுகிறது. மோசடி செய்பவர்கள் முதலில் தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி (SMS) மூலம் தொடர்பு கொண்டு, ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைக்குமாறு பாதிக்கப்பட்டவர்களைத் தூண்டுகின்றனர். அதன் பின்னர், காவலர், வங்கி ஊழியர் அல்லது தொழில்நுட்ப நிபுணர் என நடிக்கும் நபர்கள், நேரில் வீட்டிற்கு வந்து நகைகள், பணம் அல்லது வங்கி அட்டைகளை சரிபார்க்க வேண்டும் என்ற பெயரில் பெற்றுக் கொண்டு அவற்றை திருடிச் செல்கின்றனர்.
இதுகுறித்து வலைஸ் கன்டோனல் காவல் துறை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவெனில், எந்த அதிகாரப்பூர்வ நிறுவனமும் இவ்வாறு செயல்படுவதில்லை. காவலர்களோ, வங்கி ஊழியர்களோ, தொழில்நுட்ப நிபுணர்களோ, ஒருபோதும் குறியீடுகள், வங்கி அட்டைகள், நகைகள் அல்லது பணம் குறித்து கேட்க மாட்டார்கள். அதேபோல், எந்த அதிகாரப்பூர்வ அமைப்பும் அல்லது தொழில்முறை சேவை நிறுவனமும், ஒருவரின் கணினியை தங்களது கட்டுப்பாட்டில் ஒப்படைக்குமாறு கோராது.

இந்த வகை மோசடிகளில் சிக்காமல் இருக்க, பொதுமக்கள் சில அடிப்படை முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்துகிறது. அறிமுகமில்லாதவர்களுக்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்களை வழங்கக் கூடாது. வங்கி அட்டைகளின் பின் (PIN) குறியீடுகளை யாரிடமும் பகிரக்கூடாது. வங்கி ஊழியர்கள்கூட இத்தகவலை கேட்க மாட்டார்கள். அறிமுகமில்லாதவர்களிடம் வங்கி அட்டைகள், பணம் அல்லது நகைகளை ஒப்படைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் தொலைபேசி எண்களை அழைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும், யாருக்கும் உங்கள் கணினியில் அணுகல் வழங்கக் கூடாது.
முக்கியமாக, மூத்த குடிமக்களுக்கு இந்த மோசடி முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், சந்தேகமான அழைப்புகள் அல்லது நடத்தை தென்பட்டால் உடனடியாக 117 என்ற எண்ணில் வலைஸ் கன்டோனல் காவல் துறையின் அவசர மையத்தை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© Kapo VS