சுவிட்சர்லாந்தின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற பனிச்சரிவில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். வலாயிஸ் கான்டனின் சாமோசோன் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில், 42 மற்றும் 41 வயதுடைய இரண்டு கான்டன் பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
ஸ்கி சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சாமோசோன் நகராட்சிக்குட்பட்ட பொய்ன்ட் டி சேமோ (Pointe de Chemo) பகுதியில் நான்கு பேர் கொண்ட ஸ்கி சுற்றுலா குழு பயணம் மேற்கொண்டிருந்தது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,500 மீட்டர் உயரத்தில் கிழக்கு சரிவில் இறங்கிக் கொண்டிருந்த போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு, மூன்று பேர் பனிச்சரிவில் சிக்கினர்.

நான்காவது சுற்றுலாப் பயணியால் இந்த விபத்து குறித்து தகவல் அளிக்கப்பட்டது. மீட்புக் குழுவினர் ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்கள் ஊடாக மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
முதலுதவி வழங்கப்பட்ட போதிலும், 42 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 41 வயதுடையவர் ஹெலிகாப்டரில் பெர்ன் நகரின் இன்செல்ஸ்பிடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்த இருவரும் கான்டன் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பனிப்பெருக்குக்கு வெளியே இருந்த 53 வயதுடைய பெண் ஒருவரும் காயமடைந்து, சியோன் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூவரும் சுவிட்சர்லாந்து பிரஜைகள் என்பதுடன் இந்த விபத்து தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.