சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் பேசப்பட்ட 6 முக்கிய செய்திகள் – வேலை, குடியேற்றம் முதல் விமானப் பாதுகாப்பு வரை
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் மற்றும் அங்கு வேலை செய்ய விரும்புவோருக்கு முக்கியமான பல செய்திகளை கடந்த வாரம் ‘SwissTamil24.Com’ வெளியிட்டுள்ளது. அதனுடைய ஒரு தொகுப்பாக இன்றைய பதிவு இருக்கப்போகிறது. வேலைவாய்ப்பில் மொழி கட்டாயம், ஐரோப்பிய குடியேற்றர்கள் ஏன் நாடு விட்டு செல்கிறார்கள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுவிட்சர்லாந்தின் எதிர்கால உறவு, தடுப்பூசி சட்டங்கள், சூரிச் நகர இடம்பெயர்வு மற்றும் விமானப் பாதுகாப்பு விதிகள் என ஆறு முக்கிய செய்திகள் இந்த வாரம் கவனம் பெற்றுள்ளன.
சுவிட்சர்லாந்தில் வேலை தேடுவதற்கு தேசிய மொழி அவசியமா என்ற கேள்வி மீண்டும் விவாதமாகியுள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆங்கிலத்தில் இயங்கினாலும், வாடிக்கையாளர்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு உள்ள பணிகளுக்கு அந்தந்த பகுதியின் மொழி கட்டாயம் என ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்த மண்டல மொழி போதுமானதாக இருந்தாலும், சில உயர்பதவிகளில் ஜெர்மன் மற்றும் பிரெஞ்ச் இரண்டும் தெரிந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் வெளிநாட்டவர்களுக்கு மொழி அறிவு சுவிட்சர்லாந்தில் வேலைவாய்ப்புக்கு முக்கியமான அடிப்படைத் திறனாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஐரோப்பிய குடியேற்றர்கள் பெருமளவில் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சுவிஸ் முதலாளிகள் சங்கத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பேட்ரிக் சுவார்ட்-கெல்லர் கூறியதாவது, ஆண்டுக்கு சுமார் 30,000 ஐரோப்பியர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு செல்கிறார்கள். இவர்களில் பாதி பேர் ஐந்து ஆண்டுகளுக்குள் திரும்பிச் செல்கிறார்கள். பத்து ஆண்டுகள் முடிவில், 60 சதவீத ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிடுகிறார்கள். உயர்ந்த சம்பளம், வேலை வாய்ப்புகள் இருந்தாலும், கடும் போட்டி, திறன் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு காரணமாக பலர் நீண்ட காலம் தங்க முடியாமல் வெளியேறுவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுவிட்சர்லாந்தின் உறவு குறித்து இந்த ஆண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்து இடையிலான புதிய ஒப்பந்தத் தொகுப்பு 2024 டிசம்பரில் முடிவடைந்து, 2025 மே மாதத்தில் அனைத்து தரப்பினராலும் கையெழுத்திடப்பட்டது. இருப்பினும், இந்த ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருமா என்பதே தற்போது கேள்வியாக உள்ளது. இந்த ஆண்டு தேசிய சபை மற்றும் மாநிலங்களின் சபை ஆகிய இரு அவைகளிலும் விரிவான விவாதம் நடைபெற உள்ளது. மேலும், 2026 நவம்பரில் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றக் கட்டுப்பாட்டு மக்கள் வாக்கெடுப்பு, பெர்ன் மற்றும் பிரஸ்ஸல்ஸ் இடையிலான எதிர்கால உறவை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி கட்டாயம் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. தற்போது நாட்டில் தேசிய அளவில் தடுப்பூசி கட்டாயம் இல்லை. இருப்பினும், சென்ட்கேலன் பகுதியில் தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு 20,000 ஃப்ராங்க் வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதுதான் கவனத்தை ஈர்த்துள்ளது. கூட்டாட்சி பொது சுகாதார அலுவலகம் கூறுவதன்படி, கடுமையான தொற்று காலங்களில் குறிப்பிட்ட குழுக்களுக்கு கட்டாய தடுப்பூசி சட்டப்படி சாத்தியமானது. ஆனால் கோவிட் பெருந்தொற்று காலத்தில்கூட இதுவரை தேசிய அளவில் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒருவரை பலவந்தமாக தடுப்பூசி போட வைப்பது இன்னும் சட்டவிரோதமாகவே உள்ளது.
சூரிச் நகரம் தொடர்பான புள்ளிவிவரங்களும் இந்த வாரம் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிசை விட்டு வெளியேறுகிறார்கள். இதில் 55 சதவீதம் பேர் வெளிநாட்டு குடிமக்கள். நகர மக்கள் தொகையில் வெளிநாட்டவர்கள் 32 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், வெளியேறுபவர்களில் அவர்கள் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நகருக்குள் குடியேறும் மக்களிலும் 60 சதவீதத்துக்கும் மேல் வெளிநாட்டவர்களாக இருப்பது, சூரிச் ஒரு தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் நகரமாக இருப்பதை காட்டுகிறது.
விமானப் பயணிகளைப் பொருத்தவரை, பாதுகாப்பு விதிகளில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15 முதல் SWISS மற்றும் Edelweiss விமானங்களில் பவர் பேங்க்களை பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அனுமதி இல்லை. ஒருவருக்கு அதிகபட்சம் இரண்டு பவர் பேங்க்கள் மட்டுமே கொண்டு செல்ல முடியும். விமானத்தின் மின்சார வசதியை பயன்படுத்தி பவர் பேங்க்களை சார்ஜ் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. லித்தியம் பேட்டரிகள் காரணமாக ஏற்படக்கூடிய தீ விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆறு செய்திகளும் சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் பயணிகளுக்கு நேரடியாக தொடர்புடையவையாக இருப்பதால், வரும் நாட்களிலும் இவை குறித்து கூடுதல் விவாதங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் மீண்டும் இன்னும் பல தகவல்களுடன் சந்திப்போம்.