ட்ரம்ப் வந்தாலும் மாற்றமில்லை – உலக பொருளாதார மன்றம்
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து, உலக அரசியல் மற்றும் சர்வதேச நிகழ்வுகள் அவரை மையமாகக் கொண்டு இயங்குவது போன்ற ஒரு நிலை உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அவரது வசதிக்காக G7 உச்சி மாநாட்டின் திகதி கூட மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ள உலக பொருளாதார மன்றக் கூட்டம் தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாடு ஒன்று வெளிப்பட்டுள்ளது.
இந்த மாதம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெற உள்ள World Economic Forum மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump பங்கேற்க உள்ளார். இருப்பினும், அவரது வருகையால் மாநாட்டின் செயல் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என உலக பொருளாதார மன்ற அறங்காவலர் குழுவின் இணைத் தலைவர் André Hoffmann தெளிவுபடுத்தியுள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்ட்ரே ஹோஃப்மேன், உலக பொருளாதார மன்ற மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், அதில் ட்ரம்ப் கலந்து கொள்வதால் எந்த பெரிய மாற்றமும் ஏற்படும் என தான் கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளார். உலகளாவிய பொருளாதாரம், காலநிலை மாற்றம், அரசியல் நிலைத் தன்மை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதே இந்த மாநாட்டின் முதன்மை நோக்கம் என்றும், தனிநபர் ஒருவரின் வருகை காரணமாக அதன் திசை மாறாது என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் ஒன்றுகூடும் இந்த டாவோஸ் மாநாடு, உலக பொருளாதார போக்குகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், ட்ரம்பின் பங்கேற்பு கவனத்தை ஈர்த்தாலும், மாநாட்டின் அடிப்படை செயல்திட்டம் மாறாது என்பதே உலக பொருளாதார மன்றத்தின் தெளிவான நிலைப்பாடாக உள்ளது.