ஷாஃப்ஹவுசனில் கொள்ளை முயற்சி: மூன்று சந்தேகநபர்கள் கைது
ஷாஃப்ஹவுசன் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை (13.01.2026) மூன்று பேரை கொள்ளை முயற்சியுடன் தொடர்புடையவர்களாக சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள், அதற்கு முன்பு ரைன்ஃபால் அருகிலுள்ள நொய்ஹவுசன் (Neuhausen am Rheinfall) பகுதியில் உள்ள ஒரு நிறுவனக் கட்டடத்தில் உட்புக முயன்றதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதிகாலை 2.45 மணியளவில், நொய்ஹவுசன் பகுதியில் கிளாஃபென்டால் வீதி (Chlaffentalstrasse) அமைந்துள்ள ஒரு நிறுவனக் கட்டடத்தில் அலாரம் ஒலித்ததாக ஷாஃப்ஹவுசன் காவல் துறையின் அவசர மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் அதிகாரிகள், நிலத்தடி வாகன நிறுத்துமிடத்தின் கதவு சேதமடைந்ததையும், ஒரு ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். கருவிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியால் ஏற்பட்ட சொத்துச் சேதம் பல நூறு சுவிஸ் ஃப்ராங்குகள் அளவிற்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பொதுமக்களில் ஒருவரின் தகவலின் அடிப்படையில், அதிகாலை 3.15 மணியளவில் ஷாஃப்ஹவுசன் நகரின் கிராபன் வீதி (Grabenstrasse) பகுதியில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வயது 19 மற்றும் 21 (இருவர்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், நொய்ஹவுசன் பகுதியில் நடந்த கொள்ளை முயற்சிக்கு இவர்கள் பொறுப்பாளிகள் என்ற வலுவான சந்தேகம் இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
© Kapo SH