உலகிலேயே மிகப் பாதுகாப்பான சுற்றுலா நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஸ்விட்சர்லாந்து, இனி அந்தப் பட்டியலில் இல்லை என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்கள் மற்றும் உலகளாவிய தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, சுவிட்சர்லாந்து செல்லும் பிரிட்டிஷ் குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய பயண எச்சரிக்கையை முதன்முறையாக Travel and Tour World இதழ் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஜெனீவா விமான நிலையத்திலும், ஜெனீவாவை நோக்கியும் அங்கிருந்து செல்லும் ரயில்களிலும் திருட்டு அபாயம் அதிகம் என பிரிட்டன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கை சுவிட்சர்லாந்து மட்டுமல்லாது, ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஷெங்கன் பிராந்தியத்திற்கான பயண ஆலோசனைகளில் செய்யப்பட்ட முக்கிய திருத்தத்தின் ஒரு பகுதியாகும்.
பிரெக்சிட்டுக்குப் பின்னர் கடுமையாக்கப்பட்ட நுழைவு விதிமுறைகளும் இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.
மேலும், சுவிட்சர்லாந்தில் சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருத்தல், பயன்படுத்தல் அல்லது கடத்தல் போன்ற குற்றங்களுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்படுவதாக பிரிட்டன் வெளிநாட்டு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சுவிஸ் விமான நிலையங்களில் “மிக உயர்தர தொழில்நுட்ப வசதிகள்” உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. “சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் பிரிட்டிஷ் குடிமக்கள் சிக்கி, சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிலர் உயிரிழந்த சம்பவங்களும் உள்ளன” எனவும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, டிகினோ மற்றும் செயின்ட் காலென் கான்டன்களில் முகக்கவசம் அல்லது முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையும், வெளிநாட்டு பயண ஆலோசனையில் பிரிட்டன் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த புதிய எச்சரிக்கைகள், சுவிட்சர்லாந்து செல்லத் திட்டமிடும் பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து, அதிக கவனத்துடன் பயணம் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.