கிரான்ஸ்-மொண்டானா தீ விபத்து: ஐந்து இத்தாலிய இளைஞர்களின் உடல்கள் தாய்நாட்டுக்கு அனுப்பு
சுவிட்சர்லாந்தின் வலைஸ் கன்டோனில் உள்ள கிரான்ஸ்-மொண்டானா பகுதியில் நிகழ்ந்த மதுபான விடுதி தீ விபத்தில் உயிரிழந்த ஆறு இத்தாலியர்களில் ஐந்து பேரின் உடல்கள் இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை மதிய நேரத்தில், இத்தாலிய விமானப்படையின் C130 ரக விமானம், உயிரிழந்தவர்களின் உடல்களுடன் சியோன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலிய அதிகாரிகளின் தகவலின்படி, அந்த விமானம் பிற்பகல் 3.30 மணியளவில் மிலான் நகரில் நான்கு உடல்களையும், ரோம் நகரில் ஒரு உடலையும் இறக்கவுள்ளது. உடல்கள் வருகை தரும் போது, இத்தாலிய வெளிநாட்டு விவகார அமைச்சர் Antonio Tajani மற்றும் விளையாட்டு அமைச்சர் Andrea Abodi ஆகியோர் நேரில் பங்கேற்க உள்ளனர்.
மேலும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினரும் அதே விமானத்தில் பயணம் செய்துள்ளதாக இத்தாலிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வலைஸ் கன்டோனல் அதிகாரிகள் வெளியிட்ட இறுதி தகவலின்படி, இந்த தீ விபத்தில் உயிரிழந்த 40 பேரில் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட ஆறு இத்தாலிய இளைஞர்களும் அடங்குவர். இதே சம்பவத்தில் மேலும் 11 இத்தாலியர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, வரும் புதன்கிழமை இத்தாலி முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரு நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்படும் என கல்வி அமைச்சர் Giuseppe Valditara அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மகிழ்ச்சியும் கவலையற்ற பகிர்வும் நிறைந்திருக்க வேண்டிய தருணத்தில் இளம் உயிர்கள் பறிபோனது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி சமூகத்தின் எண்ணங்கள் இந்த இளம் உயிர்களை இழந்த குடும்பங்களுடன் உள்ளதாகவும், இந்த மௌன அஞ்சலி மூலம் உயிரிழந்த மாணவர்களுக்கு மரியாதை செலுத்துவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு ஒற்றுமையும் ஆதரவையும் வெளிப்படுத்த விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிரான்ஸ்-மொண்டானா தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் ஐரோப்பா முழுவதும் பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
© Keystone SDA