கிரான்ஸ்-மொண்டானா தீ விபத்து: கனத்த மனநிலையில் ஜெனீவா பள்ளிகள் திறப்பு
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொண்டானா பகுதியில் புத்தாண்டு இரவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, ஜெனீவாவில் உள்ள பள்ளி மாணவர்கள் நேற்று கனத்த மனநிலையுடன் மீண்டும் வகுப்பறைகளுக்கு திரும்பினர். இந்த விபத்தில் 14 வயது சிறுவன் ஒருவரும் உட்பட 40 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Geneva நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த விபத்தில் ஜெனீவாவைச் சேர்ந்த பல மாணவர்கள் கடுமையாக காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஆழ்ந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை கருத்தில் கொண்டு கல்வித் துறை உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பொது பள்ளிகள் மற்றும் தொழில்முனைவு பயிற்சி நிலையங்களில் உளவியல் ஆலோசனை மற்றும் மனநல ஆதரவு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்கள் மாணவர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள ஊக்குவித்து வருகின்றனர். அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகும் விபத்து தொடர்பான செய்திகள் மற்றும் காணொளிகளை அதிகமாகப் பார்ப்பதை தவிர்க்கவும் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த துயர சம்பவத்தை நினைவுகூரும் வகையில், வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் நாடு முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், Crans-Montana பகுதியில், தீ விபத்து நடந்த பாரின் உரிமையாளர்களே நடத்தி வந்த மற்றொரு மதுக்கடையின் உரிமத்தையும் உள்ளூர் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, விபத்து தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.
© WRS