சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட முன்னாள் கணக்காளர் மோஹித் என்பர் சுமார் 2 லட்சம் சுவிஸ் ஃப்ராங்க் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது.
அவர் இந்த பணத்தை தனது கிரிப்டோ வர்த்தகம் மற்றும் ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளுக்காக திருப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மோஹித், 2024 டிசம்பர் 17 அன்று உதவி பிரிவு அதிகாரியாக ஜெனீவாவில் சேர்ந்தார்.
அவருக்கு UBS வங்கியில் தூதரகக் கணக்குகளுக்கான பணம் செலுத்தும் ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
தூதரகம் சுவிஸ் விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்தும் போது, முன் அச்சிடப்பட்ட QR கோடுகள் கொண்ட பில்கள் பயன்படுத்தப்பட்டன.
மோஹித், சில விற்பனையாளர்களின் QR கோடுகளை தனது சொந்த கணக்குக்கான QR கோடுகளால் மாற்றி, பணத்தை தனது தனிப்பட்ட UBS கணக்கிற்கு திருப்பியதாக சந்தேகம் எழுந்துள்ளது.

மோஹித், மாதாந்திர வங்கி அறிக்கைகளை மாற்றி, தனது பெயரை விற்பனையாளர்களின் பெயராக காட்டியுள்ளார். இதனால், முக்கிய நிதி பாதுகாப்பு நடைமுறைகள் செயலிழந்தது, மோசடி பல மாதங்கள் தெரியாமல் இருந்தது.
கணக்காய்வாளர்கள், ஈஜேய் ட்ரவல்ஸ் என்ற விற்பனையாளருக்கு இரட்டை பணப்பரிவர்த்தனை நடந்ததை கவனித்தபோது, மோசடி வெளிப்பட்டது. அந்த பணம் சுமார் இந்திய ரூபாவில் இரண்டு கோடி என கணிக்கப்பட்டது.
மோஹித், எழுத்துப்பூர்வமாக பணத்தை கிரிப்டோ–சூதாட்ட நடவடிக்கைகளுக்காக திருப்பியதை ஒப்புக்கொண்டார்.
அவரும் குடும்பமும் உடனடியாக இந்தியாவுக்கு மீள அனுப்பப்பட்டனர்.
CBI, மோஹித்துக்கு எதிராக கீழ்காணும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது: குற்ற நம்பிக்கை மீறல், ஆவண கள்ளப்பதிவு, கணக்குகள் போலியாக்கல், ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த மோசடி, அரசில் பணியாற்றிய அதிகாரிகள் பொது பணத்தை ஆன்லைன் வர்த்தகம், சூதாட்டம் மற்றும் கிரிப்டோ வர்த்தகத்திற்கு திருப்பிய பல வழக்குகளில் ஒன்று மட்டுமே என தெரிவிக்கப்படுகின்றது.