கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து: பார் உரிமையாளர்களுக்கு எதிராக குற்ற விசாரணை தொடக்கம்
2026 ஜனவரி 1 அன்று Crans-Montana நகரில் ‘லெ கான்ஸ்டெலேஷன்’ என்ற பாரில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான ஆரம்ப விசாரணை முடிவுகள், அந்த நிறுவனத்தை இயக்கிய இரு உரிமையாளர்களுக்கு எதிராக குற்ற விசாரணை தொடங்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளன. புத்தாண்டு அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்ததுடன், 119 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வலைஸ் கன்டோனின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின் (Staatsanwaltschaft Kanton Wallis) மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை இந்த குற்ற விசாரணை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இரு உரிமையாளர்கள் மீது அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம், அலட்சியத்தால் ஏற்பட்ட உடல் காயம் மற்றும் அலட்சியமாக தீ விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்ற சட்டக் கொள்கை நடைமுறையில் இருக்கும் என்பதை அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர். இந்த தகவலை வலைஸ் கன்டோனின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
© Staatsanwaltschaft Kanton Wallis