க்ரான்ஸ்-மொன்டானா பார் தீ விபத்து – சுவிட்சர்லாந்தை உலுக்கிய பேரவலம்
சுவிட்சர்லாந்தின் வலைஸ் கன்டோனில் உள்ள பிரபலமான சொகுசு ஸ்கி சுற்றுலா நகரமான Crans-Montana பகுதியில், புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியின் போது மக்கள் நிரம்பிய ஒரு பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
புத்தாண்டு தினத்தின் அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது அங்கு இருந்தவர்கள் கடும் பதற்றத்தில் ஜன்னல்களை உடைத்து வெளியேற முயன்றதாகவும், தீக்காயங்களுடன் பலர் வீதிக்கு ஓடி வந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்தவுடன் காவல்துறை, தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
வலைஸ் கன்டோன் காவல்துறை தளபதி ஃப்ரெடரிக் ஜிஸ்லர், “இதுவரை சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 115 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த விபத்தால் நாடு முழுவதும் அதிர்ச்சி நிலவுவதால், சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னில் ஐந்து நாட்களுக்கு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, க்ரான்ஸ்-மொன்டானாவில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து தேவாலயத்தில் நினைவு பிரார்த்தனையும் நடைபெற்றது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சுவிஸ் கூட்டாட்சி தலைவர் Guy Parmelin, “இது நமது நாடு எதிர்கொண்ட மிக மோசமான துயரங்களில் ஒன்றாகும். சொல்ல முடியாத அளவிற்கு அதிர்ச்சியூட்டும் பேரழிவு” என கூறினார். அதிகாரப்பூர்வ தகவல்கள் தாமதமாகும் நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சமூக ஊடகங்களில் உதவி கோரி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். “என் 15 வயது தங்கை க்ரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு காணாமல் போயுள்ளார். அவள் மூன்று நண்பர்களுடன் இருந்தாள், அவர்களும் காணவில்லை. தயவு செய்து உதவுங்கள்” என ஒருவர் பதிவிட்டுள்ளார். இதேபோல், “அதிகாலை 1.30 மணிக்குப் பிறகு அவரை யாராவது பார்த்திருந்தால் அல்லது எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிந்தால், தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்” என மற்றொரு பதிவு சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்கள் சம்பவத்தின் கொடூரத்தை வெளிப்படுத்துகின்றன. “மக்கள் தீயை கடந்து ஓடினார்கள். நாற்காலிகளை பயன்படுத்தி ஜன்னல்களை உடைக்க முயன்றனர்” என 18 வயதுடைய அலெக்சிஸ் லாகர் சுவிஸ் ஒளிபரப்பாளரான RTS-க்கு தெரிவித்தார். தீ விபத்து நேரத்தில் பாரில் சுமார் 200 பேர் இருந்ததாகவும், பெரும்பாலானோர் 15 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்றும் கூறப்படுகிறது. சிலர் ஷாம்பெயின் பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் மெழுகுவர்த்திகள் மேல்மாடி கூரையைத் தொடுந்ததே தீப்பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து தாக்குதல் காரணமாக நிகழ்ந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். “இது தீயால் ஏற்பட்ட விபத்து. பயங்கரவாத தாக்குதல் என்ற கேள்வியே இல்லை” என வலைஸ் கன்டோனின் தலைமை வழக்கறிஞர் Beatrice Pilloud தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் வலைஸ் கன்டோனில் உள்ள மருத்துவமனைகள் மட்டுமின்றி, Zurich, Lausanne மற்றும் Geneva போன்ற நகரங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அண்டை நாடுகளும் மருத்துவ உதவி வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. சிலர் ஏற்கனவே பிரான்சின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பதால், பாதிக்கப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த அடையாளம் காணும் செயல்முறை பல நாட்கள், சில சமயங்களில் வாரங்களும் ஆகக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மூலம்: சர்வதேச ஊடக தகவல்கள்