ஆப்கான் குற்றவாளியை நாடு கடத்திய சுவிஸ் அரசாங்கம்
சுவிட்சர்லாந்து அரசு இரண்டாவது ஆப்கான் குற்றவாளியை ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தியுள்ளது. கடந்த ஆண்டு தோல்வியடைந்த மீள அனுப்பும் முயற்சிக்குப் பிறகு, தாலிபான் ஆட்சியுடன் சுவிட்சர்லாந்து மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தற்போது பலன் அளிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
டிசம்பர் நடுப்பகுதியில் மேலும் ஒரு குற்றவாளி காபூலுக்கு நாடு கடத்தப்பட்டதை சுவிட்சர்லாந்தின் குடிவரவு விவகாரங்களுக்கான மாநில செயலகம் உறுதிப்படுத்தியது.
சுவிட்சர்லாந்தில் குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்றுள்ள 20 ஆப்கான் குடிமக்களில் இதுவரை இருவரே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
2021 முதல் தாலிபான் ஆட்சியில் இருப்பதால், தாலிபான் அரசுடன் சுவிட்சர்லாந்துக்கு அதிகாரப்பூர்வ தூதரக உறவுகள் இல்லாத நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தல் நடவடிக்கைகள் கடினமாக இருந்து வருகிறது.

ஒரு ஆண்டுக்கு முன்பு, ஒரு ஆப்கான் குற்றவாளியை நாடு கடத்தும் முயற்சி தோல்வியடைந்தது. காபூலில் விமானம் தரையிறங்கிய பின்னரும், அந்த நபர் மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு திரும்ப அனுப்பப்பட்டார்.
இதன் பின்னர், எதிர்கால நாடு கடத்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், அதிகாரப்பூர்வமற்ற தாலிபான் அரசின் பிரதிநிதிகளை ஜெனீவா விமான நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்திருந்தது.
தாலிபான் பிரதிநிதிகள் 20 ஆப்கான் குற்றவாளிகளில் 13 பேரை அடையாளம் கண்டுள்ளனர். இவர்களில் ஒருவரே டிசம்பர் மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்ட நபர் ஆவார் மேலும், கூடுதல் நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.